Published : 30 Aug 2025 07:21 AM
Last Updated : 30 Aug 2025 07:21 AM
புதுடெல்லி: பிஹார் மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரம் தொடர்பான வழக்கில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் பிஹாரில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற கடந்த விசாரணையின்போது, வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், விடுபட்டதற்கான காரணம் உள்ளிட்டவற்றுடன் இணையதளத்தில் வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே பிஹாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட அல்லது விடுபட்ட வாக்காளர்கள், தங்களது ஆதார் எண்ணுடன் இணையதளம் வாயிலாகவே ஒரு மாதம் வரையில் மீண்டும் விண்ணப்பிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இதையடுத்து கடந்த ஒரு மாத காலமாக மீண்டும் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த காலக்கெடுவை செப்டம்பர் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் மேலும் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணையை செப். 1-ம் தேதி உச்ச நீதிமன்ற அமர்வு நடத்தும் என்று தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT