Published : 30 Aug 2025 07:46 AM
Last Updated : 30 Aug 2025 07:46 AM
ஹைதராபாத்: தெலங்கானாவில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால், கிருஷ்ணா, கோதாவரி அணைகள் நிரம்பி வருகின்றன. மேலும் பல ஏரிகள், குளங்கள் நீர்நிலைகள் என அனைத்தும் நிரம்பியதால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
இதன் காரணமாக தெலங்கானாவில் காமாரெட்டி, நிஜாமாபாத், மேதக் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள சாலைகள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளன. அணைக்கட்டுகளின் கரைகள், ஏரிக்கரைகள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. நிர்மல், ஆதிலாபாத், குமரம்பீம், யாதாத்ரி புவனகிரி, கம்மம், சிரிசில்லா ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருவதால் அங்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, அதிகாரிகளுடன் இணைந்து வெள்ளம் பாதித்த இடங்களை விமானத்தில் பறந்தபடி ஆய்வு செய்தார். மொத்தம் 794 இடங்களில் 1,039 கி.மீ தூரம் வரை சாலைகள் மிகவும் நாசமடைந்து போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. கன மழைக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். பல கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.
தொடர் மழையால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 44-ல் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் லாரிகள், கண்டெய்னர்கள், பெட்ரோல், டீசல் டேங்கர்கள் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கன மழையால் தென் மத்திய ரயில்வே மண்டலம், பல ரயில்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் பல ரயில்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன. கனமழைக்கு நெல், பருத்தி, வாழை, தக்காளி, மிளகாய், மஞ்சள் ஆகிய பயிர்கள் மூழ்கி விட்டன.
பல கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு விட்டதால் அங்குள்ள மக்களுக்கு அரசு தரப்பில் ட்ரோன்கள் மூலம் உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், மருந்துகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. நேற்றும் மழை பெய்ததால், பள்ளி, கல்லூரிகளுக்கு பல மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT