Last Updated : 29 Aug, 2025 01:06 PM

 

Published : 29 Aug 2025 01:06 PM
Last Updated : 29 Aug 2025 01:06 PM

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் ஒரு முக்கிய பங்காளி: பிரதமர் மோடி

இந்திய - ஜப்பான் பொருளாதார மன்றத்தில் உரை நிகழ்த்தும் பிரதமர் நரேந்திர மோடி

டோக்கியோ: இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவில் நடைபெற்ற இந்திய-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் உரை நிகழ்த்தினார். அவரது உரை விவரம் வருமாறு: இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளியாக இருந்து வருகிறது. மெட்ரோ ரயில் முதல் உற்பத்தி வரை, குறைக்கடத்திகள் முதல் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வரை, ஒவ்வொரு துறையிலும் நமது கூட்டாண்மை பரஸ்பர நம்பிக்கையின் அடையாளமாக மாறியுள்ளன.

ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் 40 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 30 பில்லியன் டாலர் தனியார் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள மாற்றத்தை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். இன்று, இந்தியாவில் அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார ஸ்திரத்தன்மை, கொள்கைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் கணிக்கக்கூடிய தன்மை உள்ளது.

இன்று இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. மேலும், மிக விரைவில் அது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறப் போகிறது. 2017 ஆம் ஆண்டில், நாங்கள் ஒரே நாடு, ஒரே வரியை அறிமுகப்படுத்தினோம். இப்போது, ​​இன்னும் பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சில வாரங்களுக்கு முன்பு, எங்கள் நாடாளுமன்றம் எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி முறையை அங்கீகரித்தது. அதோடு எங்கள் சீர்திருத்தங்கள் வரிவிதிப்பைத் தாண்டி வெகு தொலைவில் உள்ளன. வணிகம் செய்வதை எளிதாக்குவதை நாங்கள் வலியுறுத்துகிறோம். வணிகத்திற்கான ஒற்றை டிஜிட்டல் சாளர ஒப்புதலை நாங்கள் வழங்கியுள்ளோம்.

இந்தியாவில், பாதுகாப்பு, விண்வெளி போன்ற முக்கியமான துறைகள் ஏற்கனவே தனியார் துறைக்கு திறந்து விடப்பட்டுள்ளன. இப்போது நாங்கள் அணுசக்தித் துறையையும் திறந்து விடுகிறோம். இந்த சீர்திருத்தங்களுக்குப் பின்னால் வளர்ச்சி அடைந்த பாரதத்தை கட்டமைக்க வேண்டும் என்ற எங்கள் உறுதிப்பாடு உள்ளது.

உலகம் இன்று இந்தியாவை வெறுமனே பார்க்கவில்லை, இந்தியாவை உற்று நோக்குகிறது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களை உலகம் அங்கீகரித்தது மட்டுமல்லாமல், பாராட்டவும் செய்துள்ளது.

ஆட்டோமொபைல் துறையில் இந்தியா - ஜப்பான் கூட்டாண்மை மிகவும் வெற்றிகரமாக உள்ளது. உலகளாவிய தெற்கின், குறிப்பாக ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கு நாம் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்ய முடியும். வாருங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள், உலகத்திற்காக உற்பத்தி செய்யுங்கள்.

செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்திகள், குவாண்டம் கம்ப்யூட்டிங், உயிரி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆகியவற்றில் இந்தியா துணிச்சலான முயற்சிகளை எடுத்துள்ளது. ஜப்பானின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையும் இணைந்து இந்த நூற்றாண்டின் தொழில்நுட்பப் புரட்சியை வழிநடத்த முடியும். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x