Published : 29 Aug 2025 06:52 AM
Last Updated : 29 Aug 2025 06:52 AM
பாட்னா: நேபாளம் வழியாக பிஹாருக்குள் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 3 பேர் ஊடுருவி உள்ளனர். அவர்களின் புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டு உள்ளனர். அவர்களை கண்டுபிடிக்க மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இப்போதே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிஹார் முழுவதும் வாகன பேரணி நடத்தி வருகிறார். அவரோடு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களும் இணைந்து உள்ளனர்.
இந்த சூழலில் நேபாளம் வழியாக பிஹாருக்குள் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 3 பேர் ஊடுருவி இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானின் ராவல் பிண்டியை சேர்ந்த ஹூசைன், உமர்கோட்டை சேர்ந்த அடில், பகவல்பூரை சேர்ந்த உஸ்மான் ஆகியோர் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பிஹாருக்குள் ஊடுருவி உள்ளனர். அவர்கள் நாச வேலைகளில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர் என்று உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
உளவுத் துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் 3 தீவிரவாதிகளின் புகைப்படங்களை பிஹார் போலீஸார் வெளியிட்டு உள்ளனர். அவர்களை கண்டுபிடிக்க மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. இதுகுறித்து பிஹார் போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியாவும் நேபாளமும் 1,751 கி.மீ. எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. பிஹாரின் 7 மாவட்டங்கள் நேபாள எல்லையில் அமைந்துள்ளன. இந்த 7 மாவட்டங்களின் 729 கி.மீ. எல்லைப் பகுதிகளில் சஷஸ்திர சீமா பல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
நேபாள குடியுரிமை அல்லது இந்திய குடியுரிமை ஆதாரங்களை போலியாக உருவாக்கி 3 தீவிரவாதிகளும் பிஹாருக்குள் நுழைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். நள்ளிரவு நேரத்தில் 3 தீவிரவாதிகளும் பாதசாரிகளாக பிஹாருக்குள் நுழைந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. தற்போதைய சூழலில் பாகிஸ்தானை சேர்ந்த சுமார் 3,000-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா விசாவில் நேபாளத்தில் தங்கி உள்ளனர். அவர்களை இந்திய உளவுத் துறை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தற்போது பிஹாரில் வாகன பேரணி நடத்தி வருகிறார். அவர் திறந்தவெளி வாகனத்தில் பேரணியாக செல்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ராகுல் காந்தியின் பயண திட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக நேபாள எல்லையை ஒட்டிய பகுதிகளில் அவர் பேரணி நடத்த வேண்டாம் என்று கண்டிப்புடன் அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு பிஹார் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT