Last Updated : 28 Aug, 2025 06:10 PM

1  

Published : 28 Aug 2025 06:10 PM
Last Updated : 28 Aug 2025 06:10 PM

“என் உயிர் உள்ளவரை மக்களின் வாக்குரிமையை யாரும் பறிக்க விடமாட்டேன்” - மம்தா சூளுரை

கொல்கத்தா: “நான் உயிரோடு இருக்கும் வரை மக்களின் வாக்குரிமையை யாரும் பறிக்க அனுமதிக்க மாட்டேன்” என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார். மேலும், நாடு முழுவதும் மேற்கு வங்க மக்கள் மீது பாஜக 'மொழியியல் பயங்கரவாதத்தை' கட்டவிழ்த்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மத்திய கொல்கத்தாவின் மாயோ சாலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான திரிணமூல் சத்ரா பரிஷத்தின் நிறுவன தின நிகழ்வில் உரையாற்றிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கும் நோக்கத்துடன் மேற்கு வங்கத்தில் கணக்கெடுப்புகளை மேற்கொள்ள, மாநிலத்துக்கு வெளியே இருந்து 500-க்கும் மேற்பட்ட குழுக்களை பாஜக அனுப்பியுள்ளது. யாராவது உங்கள் வீட்டுக்கு கணக்கெடுப்புக்காக வந்தால், உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம். வாக்காளர் பட்டியலில் இருந்து உங்கள் பெயரை நீக்க அவர்கள் இந்தத் தகவலைப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.

அதற்கு பதிலாக, உங்கள் பெயர்கள் இன்னும் உள்ளனவா அல்லது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்களே சரிபார்க்க வேண்டும். உங்கள் ஆதார் அட்டைகள் உங்களிடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நான் உயிருடன் இருக்கும் வரை மக்களின் வாக்குரிமையை யாரும் பறிக்க விடமாட்டேன்.

ஏழைகளை வங்கதேசிகள் என்று கூறி நீங்கள் (பாஜக) சித்ரவதை செய்கிறீர்கள். ஆனால், ஏழை மக்கள்தான் எனது மிகப் பெரிய பலம். நான் சாதி அல்லது மதத்தை நம்பவில்லை, மனிதநேயத்தை நம்புகிறேன்.

எங்கள் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் அச்சுறுத்துகிறது. அதன் அதிகார வரம்பு ஆண்டு முழுவதும் அல்ல, தேர்தலின்போது மூன்று மாதங்களுக்கு மட்டுமே. ஆனால் உண்மையான நோக்கம் வேறு ஒன்று. தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நான் அதை நடக்க விடமாட்டேன்.

மேற்கு வங்க மக்களை அவதூறு செய்யும் முயற்சியில் திரைப்படங்களை உருவாக்க பணம் செலவிடப்படுகிறது. சுதந்திர இயக்கத்தின்போது மேற்கு வங்க மக்கள் வகித்த பங்கை மறக்கடிக்க பாஜக விரும்புகிறது. இந்தியா முழுவதும் மேற்கு வங்கத்தினருக்கு எதிராக "மொழியியல் பயங்கரவாதத்தை" கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். இந்த மொழியியல் பயங்கரவாதத்தை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.

கேரளாவில் உள்ள சிபிஎம் அரசு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆங்கிலேயர்களுக்கு பயந்து நாட்டை விட்டு ஓடிவிட்டதாகக் கூறுகிறது. இதை நாங்கள் கண்டிக்கிறோம். அவர்கள் எங்களை எதிர்கொள்ள பாஜகவுடன் கைகோக்கிறார்கள்" என்று மம்தா பானர்ஜி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x