Last Updated : 28 Aug, 2025 12:13 PM

 

Published : 28 Aug 2025 12:13 PM
Last Updated : 28 Aug 2025 12:13 PM

பருவமழையால் தத்தளிக்கும் வட மாநிலங்கள்: ஜம்மு காஷ்மீரில் உயிரிழப்பு எண்ணிக்கை 41 ஆக உயர்வு

புதுடெல்லி: வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பஞ்சாபில் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நிலச்சரிவு மற்றும் கனமழை காரணமாக ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இதில், வைஷ்ணவி தேவி கோயில் நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மட்டும் 34 ஆகும்.

டெல்லியில் இயல்பை விட 60% அதிக மழை: டெல்லியில் ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை பெய்த மழையின் அளவு மிகவும் அதிகமாகும், இது இயல்பை விட 60% அதிகம். கனமழையால் டெல்லி வழியாகப் பாயும் யமுனை நதியின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 204.61 மீட்டரை எட்டியது, தொடர்ந்து இரண்டாவது நாளாக யமுனை நதியின் நீர்மட்டம் 204.50 மீட்டரை தாண்டியுள்ளது.

310 பேர் உயிரிழப்பு: இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பு, நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பால், இதுவரை 310 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் பருவமழையால் சுமார் 2,450 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. செவ்வாயன்று பெய்த கனமழை, நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம் காரணமாக இமாச்சல் மாநிலத்தின் 12 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் மொத்தம் 584 சாலைகள் மூடப்பட்டன.

10,000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்: ஜம்மு-காஷ்மீரில், செவ்வாய்க்கிழமை காலை முதல் 24 மணி நேரத்தில் உதம்பூரில் 629.4 மிமீ மழையும், ஜம்முவில் 380 மிமீ மழையும் பெய்து புதிய மழைப்பொழிவு சாதனையை படைத்துள்ளது. அனந்த்நாக் மற்றும் ஸ்ரீநகரில் ஜீலம் நதி வெள்ள அபாய அளவை தாண்டி பாய்வதால், பல குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

ஜம்மு காஷ்மீர் முழுவதும் நீர்நிலைகள் நிரம்பி வழிவதாலும், திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாகவும் பல முக்கிய பாலங்கள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தாழ்வான பகுதிகளில் இருந்து 10,000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் உள்ள வைஷ்ணவி தேவி கோயில் பகுதியில் செவ்வாய் மதியம் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஜம்மு-காஷ்மீரில் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. மழை பெய்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால், ஜம்மு-காஷ்மீர் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என்று கல்வி அமைச்சர் சகினா இட்டூ அறிவித்தார்.

கனமழை பாதிப்புகளால் ஜம்மு மற்றும் கத்ரா நிலையங்களுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் 58 ரயில்களை ரத்து செய்ய வடக்கு ரயில்வே உத்தரவிட்டது. அதே நேரத்தில் இப்பகுதியில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் 64 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆக.30 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை: கனமழை காரணமாக பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாபில், தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம் மற்றும் பிற அமைப்புகள் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. பதான்கோட் மாவட்டத்தில் உள்ள மாதோபூர் தடுப்பணையின் கதவுகளைத் திறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 60 நீர்ப்பாசன அதிகாரிகளை விமானப்படை விமானம் மூலம் மீட்டது, அதே நேரத்தில் ஒரு அதிகாரியை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணாமக பஞ்சாபில் ஆகஸ்ட் 27 முதல் ஆகஸ்ட் 30 வரை அனைத்து பள்ளிகளுக்கும் மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x