Published : 27 Aug 2025 05:10 PM
Last Updated : 27 Aug 2025 05:10 PM
நாளந்தா: பிஹாரின் நாளந்தா மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் ஷ்ரவன் குமார், கிராம மக்களால் தாக்கப்பட்டார்.
நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஜோகிபூர் மலாவன் கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தனர். இதனையடுத்து இன்று காலை அமைச்சர் ஷ்ரவன் குமார், உள்ளூர் எம்எல்ஏவுடன் சேர்ந்து, சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்க ஜோகிபூர் மலாவன் கிராமத்துக்குச் சென்றார்.
அஞ்சலி செலுத்தும் போது, கிராம மக்களில் சிலர் திடீரென அமைச்சரையும், எம்எல்ஏவையும் தாக்கினர். ஆனாலும், அமைச்சரும் எம்எல்ஏவும் பெரிய காயங்கள் இல்லாமல் தப்பினர். மேலும், ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு கூட்டம் அமைச்சரை துரத்திச் சென்றது. இந்த சம்பவத்தில் அமைச்சரின் பாதுகாவலர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்து பேசிய அமைச்சர் ஷ்ரவன் குமார், "நாளந்தாவில் நடந்த ஒரு சாலை விபத்தில் ஒன்பது பேர் இறந்த நிலையில், இன்று காலை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றேன். அனைவருக்கும் சரியான நேரத்தில் நிதி உதவி கிடைப்பதை உறுதி செய்வதற்காக அதிகாரிகளையும் அழைத்துச் சென்றேன்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்துவிட்டு நான் வெளியேறவிருந்தபோது, சிலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கினர். சிலர் இந்த விவகாரம் மேலும் மோசமடைய வேண்டும் என்றும், ஒரு சர்ச்சை வெடிக்க வேண்டும் என்றும் விரும்பினர். ஆனால் நான் அங்கிருந்து அமைதியாகச் திரும்பிவிட்டேன்" என்று அவர் கூறினார்.
இந்த வன்முறை சம்பவத்துக்குப் பிறகு, அப்பகுதியில் உள்ள பல காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் குவிந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT