Published : 27 Aug 2025 12:50 PM
Last Updated : 27 Aug 2025 12:50 PM
புதுடெல்லி: காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியூட்டக்கூடியது என்றும், ஆழ்ந்த வருந்தத்தக்கது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
திங்கள் கிழமையன்று கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். நாசர் மருத்துவமனையை இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஹுசாம் அல்-மஸ்ரி, மரியம் அபு டாகா, மோஸ் அபு தாஹா, முகமது சலாமா மற்றும் அகமது அபு அஜீஸ் ஆகிய பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் ராய்ட்டர்ஸ் மற்றும் அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்காகப் பணியாற்றி வந்தனர்.
காசாவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் "காசாவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியூட்டக்கூடியது மற்றும் மிகவும் வருந்தத்தக்கது.
இந்த மோதலில் பொதுமக்கள் உயிரிழப்புகளை இந்தியா எப்போதும் கண்டித்து வருகிறது. இதுகுறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் சர்வதேச அளவில் கண்டனத்தை எதிர்கொள்கிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஊடகவியலாளர்கள் பெரிய அளவில் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான 22 மாத மோதலில் காசாவில் குறைந்தது 192 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 18 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT