Published : 27 Aug 2025 10:23 AM
Last Updated : 27 Aug 2025 10:23 AM
புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் குறித்த நூல் அண்மையில் வெளியானது. அதில் பல்வேறு சுவாரசிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. உத்தராகண்ட் மாநிலம், பவுரி கர்வால் அருகே கிரி என்ற மலைக்கிராமத்தில் கடந்த 1945-ம் ஆண்டில் அஜித் தோவல் பிறந்தார். உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் ஹேம்வதி நந்தன் பகுகுணாவின் நெருங்கிய உறவினரான அவர், கடந்த 1968-ம் ஆண்டில் ஐபிஎஸ் அதிகாரியானார்.
கேரள காவல் துறையில் பணியாற்றிய தோவல், கடந்த 1971-ம் ஆண்டில் தலச்சேரியில் நடைபெற்ற கலவரத்தை கட்டுப்படுத்தி நாடு முழுவதும் பிரபலம் அடைந்தார். கடந்த 1972-ம் ஆண்டில் இந்திய உளவுத் துறையில் அஜித் தோவல் இணைந்தார்.
மிசோரமில் செயல்பட்ட தீவிரவாத குழுக்கள் குறித்த தகவல்களை திரட்ட அவர் அனுப்பப்பட்டார். அவரது தீவிர முயற்சியால் கடந்த 1986-ம் ஆண்டில் மத்திய அரசுக்கும் தீவிரவாத குழுக்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் அணு சக்தி திட்டங்கள் குறித்த தகவல்களை திரட்ட அந்த நாட்டுக்கு அஜித் தோவல் அனுப்பப்பட்டார். இதற்காக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் அவர் பணியமர்த்தப்பட்டார். அப்போது பாகிஸ்தானின் இளம் அரசியல் தலைவர் நவாஸ் ஷெரீபின் மிக நெருங்கிய நண்பராக தோவல் மாறினார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே கஹுதா என்ற பகுதி உள்ளது. அங்கு கான் ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. அந்த மையத்தில் பாகிஸ்தானின் அணு சக்தி திட்டப் பணிகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின. கஹுதா பகுதிக்கு அஜித் தோவல் சென்றார்.
பிச்சைக்காரராக வேடமிட்டு கான் ஆராய்ச்சி மையத்தை வேவு பார்த்தார். அங்குள்ள சலூன் கடையில் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் முடிதிருத்தம் செய்தனர். அந்த சலூன் கடைக்கு சென்ற அஜித் தோவல், முடிகளை சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.
அந்த முடிகளை ஆய்வு செய்தபோது யுரேனியம் உள்ளிட்ட கதிர்வீச்சு இருந்தது தெரியவந்தது. இதன்மூலம் பாகிஸ்தானின் அணு சக்தி திட்டம் கண்டுபிடிக்கப்பட்டு, உலக நாடுகளுக்கு ஆதாரத்துடன் தகவல் தெரிவிக்கப்பட்டது. சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தானின் அணு சக்தி திட்டங்கள் சுமார் 15 ஆண்டுகள் தாமதமாகின.
கடந்த 1988-ம் ஆண்டில் பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் காலிஸ்தான் தீவிரவாதிகள் நுழைந்தனர். ஏற்கெனவே கடந்த 1984-ம் ஆண்டில் நடத்தப்பட்ட புளூ ஸ்டார் ஆபரேஷனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். எனவே அதுபோன்ற நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க விரும்பவில்லை. எனவே காலிஸ்தான் தீவிரவாதிகளை அடக்கும் பொறுப்பு அஜித் தோவலிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்படி பொற்கோயிலுக்குள் நுழைந்த தோவல், காலிஸ்தான் தீவிரவாதிகளிடம் தன்னை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளி என்று அறிமுகம் செய்து கொண்டார். காலிஸ்தான் தீவிரவாதிகளோடு தங்கியிருந்து அவர்கள் குறித்த முழுவிவரங்களையும் என்எஸ்ஜி படைக்கு ரகசியமாக வழங்கினார்.
தோவல் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் என்எஸ்ஜி படையின் கமாண்டோ வீரர்கள், தொலைவில் இருந்து ஒவ்வொரு தீவிரவாதியாக சுட்டுக் கொன்றனர். இறுதியில் காலிஸ்தான் தீவிரவாதிகள், இந்திய ராணுவத்திடம் சரண் அடைந்தனர். இதற்காக தோவலுக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது.
கடந்த 1990-ம் ஆண்டில் காஷ்மீர் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த தோவல் அனுப்பப்பட்டார். அப்போது காஷ்மீரின் மிகப்பெரிய தீவிரவாதியாக அறியப்பட்ட குகா பாரேவை சந்தித்த தோவல் அவரது மனதை மாற்றினார். இதன்காரணமாக 1996-ம் ஆண்டில் நடைபெற்ற காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் குகா பாரே போட்டியிட்டார். இதன்மூலம் காஷ்மீரில் தீவிரவாதம் ஓரளவுக்கு குறைந்தது.
கடந்த 1999-ம் ஆண்டு காந்தஹார் விமான கடத்தலின்போது, தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய இந்திய குழுவில் தோவலும் இடம்பெற்றிருந்தார். கடந்த 1999-ம் ஆண்டு கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. இதைத் தொடர்ந்து வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் உளவுத் துறை தலைவராக அஜித் தோவல் நியமிக்கப்பட்டார்.
மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்திலும் உளவுத் துறை தலைவராக இருந்த தோவல் கடந்த 2005-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். அப்போது அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் மகள் திருமணம் 2005-ம் ஆண்டு துபாயில் நடைபெற்றது. திருமணத்தின்போது தாவூதை கொலை செய்ய இந்திய உளவுத் துறை திட்டமிட்டது.
இந்த ஆபரேஷனுக்கு தோவல் வழிகாட்டியாக செயல்பட்டார். இதன் ஒரு பகுதியாக தாவூத்தின் வலது கரம் என்று அழைக்கப்பட்ட விக்கி மல்ஹோத்ராவுடன் தோவல் நெருக்கமானார். இந்திய உளவுத் துறையின் திட்டத்தை அறிந்த தாவூத், மகளின் திருமணத்தில் பங்கேற்கவில்லை.
இறுதியில் தோவலின் உதவியுடன் விக்கி மல்ஹோத்ரா மட்டும் கைது செய்யப்பட்டார். கடந்த 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அப்போது முதல் அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT