Published : 27 Aug 2025 10:15 AM
Last Updated : 27 Aug 2025 10:15 AM
புதுடெல்லி: நாட்டில் உள்ள சிறு நிறுவனங்கள், விவசாயிகளை பாதுகாக்கும் விஷயத்தில் எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் கவலையில்லை’’ என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக தெரிவித்தார். உலக நாடுகளுக்கு அதிகபட்ச வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவுக்கு 25 சதவீத வரியை விதித்தார். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியாவுக்கு கூடுதலாக 25% வரியை அறிவித்தார்.
இதற்கான உத்தரவில் நேற்று ட்ரம்ப் கையெழுத்திட்டார். இதையடுத்து அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்படும். இந்த நடைமுறை இன்று அமலுக்கு வருகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: உலகளவில் தற்போது பொருளாதார ரீதியாக அரசியல் செய்வதில் ஒவ்வொருவரும் பரபரப்பாக இருக்கின்றனர். ஆனால்,அகமதாபாத் மண்ணில் இருந்து ஒன்று சொல்கிறேன். மகாத்மா காந்தியின் மண்ணில் இருந்து ஒன்று சொல்கிறேன்.
என்னுடைய சிறு நிறுவனங்களைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள், சிறிய கடை வைத்துள்ள சகோதர, சகோதரிகள், சிறு விவசாய சகோதர, சகோதரிகள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு மீண்டும் மீண்டும் உறுதி அளிக்கிறேன். உங்களுடைய நலன், உணர்வுகள்தான் இந்த மோடிக்கு முதன்மையானது.
எனது நாட்டில் சிறு நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள், விவசாயிகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறேன். அதற்கு தடையாக எத்தனை நெருக்கடி வந்தாலும், அவர்களின் வாழ்வாதாரத்தை விட்டுத்தர மாட்டேன். அவர்களுக்கு சிறு கஷ்டம் வருவதை என்னுடைய தலைமையிலான அரசு பொறுத்துக் கொள்ளாது. எத்தனை நெருக்கடி வந்தாலும், அவற்றை தாங்கும் வலிமையை அதிகரித்து கொண்டே இருப்போம்.
இன்று ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டம் குஜராத்தில் இருந்து மிகப்பெரும் சக்தியைப் பெற்றுள்ளது. இருபது ஆண்டு கடின உழைப்பின் பலனாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி உறுதியாக கூறினார். முன்னதாக கடந்த சனிக்கிழமை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் பேசும்போது, ‘‘வர்த்தகத்தையே தொழிலாக கொண்டுள்ள அமெரிக்கா, மற்ற நாடுகள் வர்த்தகம் செய்வதை குற்றம் சாட்டுவது முரணாக உள்ளது.
இந்தியாவின் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் வேண்டாம் என்றால், அவற்றை வாங்க வேண்டாம். இந்திய பொருட்களை வாங்க சொல்லி உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், ஐரோப்பிய நாடுகள் வாங்குகின்றன. அமெரிக்கா வாங்குகிறது. எனவே, உங்களுக்கு பிரச்சினை என்றால், வாங்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள்’’ என்று திட்டவட்டமாக கூறியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT