Published : 27 Aug 2025 09:50 AM
Last Updated : 27 Aug 2025 09:50 AM
புதுடெல்லி: அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில் சுகாதார அமைச்சர், குடிநீர் வாரிய தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை சவுரப் பரத்வாஜ் வகித்துள்ளார். தற்போது ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி பிரிவுக்கான தலைவராக உள்ளார். இந்நிலையில் ஆம் ஆத்மி ஆட்சியில் மருத்துவ கட்டுமான திட்டங்களில் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளதாக பாஜக அளித்த புகாரின் பேரில் டெல்லி லஞ்ச ஒழிப்புத் துறை (ஏசிபி) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இதுகுறித்து ஏசிபி அதிகாரிகள் கூறுகையில், “கடந்த 2018-19-ல் ரூ.5,590 கோடி மதிப்பிலான 24 மருத்துவமனை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுபோல் ரூ.1,125 கோடி செலவிலான ஐசியு மருத்துவமனை திட்டத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளன" என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த ஊழல் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் டெல்லியில் முன்னாள் அமைச்சர் சவுரப் பரத்வாஜின் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய 12 இடங்களில் அமலாக்கத் துறை நேற்று சோதனை நடத்தியது.
இந்த சோதனை குறித்து டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால் எக்ஸ் தளத்தில், “விசாரணை அமைப்புகளை மோடி அரசு தவறாகப் பயன்படுத்தி வருவதற்கு இந்த சோதனை மற்றொரு உதாரணம் ஆகும். வரலாற்றில் எந்தவொரு கட்சியும் ஆம் ஆத்மி கட்சியை போன்று குறிவைக்கப்பட்டதில்லை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT