Published : 26 Aug 2025 07:27 AM
Last Updated : 26 Aug 2025 07:27 AM
புதுடெல்லி: மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் (சிஐஎஸ்எப்) முதல் முறையாக பெண் கமாண்டோ குழுவினரை முக்கிய பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடுமையான பயிற்சிகளுக்குப் பிறகு விமான நிலையங்கள் மற்றும் பிரச்சினைகள் அதிகம் மிகுந்த பகுதிகளில் பெண் கமாண்டோ குழுவினர் பணியமர்த்தப்பட வாய்ப்புள்ளது.
இதற்காக 100 பெண் சிஐஎஸ்எப் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆயுதப் பயிற்சி, தீயணைப்பு பயிற்சி, ஓட்டம், காடுகளில் உயிர் வாழும் பயிற்சி, நெருக்கடியான தருணங்களில் சாமர்த்தியமாக முடிவெடுப்பது, குழுப் பணியை சோதிக்க வடிவமைக்கப்பட்ட 48 மணிநேர நம்பிக்கையை வளர்க்கும் பயிற்சி போன்ற செயல்பாட்டு திறன்கள் அவர்களுக்கு வழங்கப்படும்.
மத்திய பிரதேசத்தின் பர்வாஹாவில் உள்ள பிராந்திய பயிற்சி மையத்தில் (ஆர்டிசி) பெண் கமாண்டோக்களுக்கான இந்தப் பயிற்சிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன. உயர் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் ஆலைகளில் விரைவு எதிர்வினை குழுக்கள் (கியூஆர்டி) மற்றும் சிறப்பு பணிக்கு குழு (எஸ்டிஎப்) ஆகியவற்றில் பணியாற்றும் வகையில் பெண் கமாண்டோ குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தயார்படுத்தப்பட உள்ளன.
பல்வேறு விமான நிலையங்களில் தற்போது பணிமயர்த்தப்பட்டுள்ள 30 பெண்களைக் கொண்ட முதல் குழு ஆகஸ்ட் 11 முதல் அக்டோபர் 2025 வரை பயிற்சி பெறும். அதைத் தொடர்ந்து இரண்டாவது பெண் கமாண்டோ குழு அக்டோபர் 6 முதல் நவம்பர் 29 2025 வரை பயிற்சியில் இருக்கும். குறைந்தது 100 பெண் கமாண்டோக்களுக்கு இதுபோன்று பயிற்சிகள் அளிக்கப்படும்.
இதுகுறித்து சிஐஎஸ்எப் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “சிஐஎஸ்எப் முக்கிய பணிகளில் பெண்களைச் சேர்ப்பது பாலின சமத்துவத்தை நோக்கிய முதல்படியாக அமையும். மேலும், சிஐஎஸ்எப் படையில் பெண்களின் பங்களிப்பை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற அரசின் இலக்கை வேகமாக அடைய இது உதவும்’’ என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT