Published : 26 Aug 2025 07:22 AM
Last Updated : 26 Aug 2025 07:22 AM
விசாகப்பட்டினம்: ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் ஹிம்கிரி என்ற இரு போர்க்கப்பல்கள் இன்று கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. இந்திய கடற்படையில் 135-க் கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகியவை விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் ஆகும். 20 நீர்மூழ்கிகளும் கடற்படையில் உள்ளன. வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்திய போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 160 ஆகவும், 2035-ம்ஆண்டில் 200 ஆகவும் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக உள்நாட்டிலேயே போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ‘புராஜக்ட் 17ஏ' என்ற திட்டத்தின் அடிப்படையில் சிறிய ரகத்தை சேர்ந்த 7 போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இந்த போர்க்கப்பல்களுக்கு நீலகிரி, ஹிம்கிரி, தாராகிரி, உதயகிரி, துனாகிரி, விருதகிரி, மகேந்திரகிரி என்று இந்திய மலைகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு கப்பலும் ரூ.4,000 கோடி மதிப்பு கொண்டவை ஆகும்.
‘புராஜக்ட் 17ஏ' திட்டத்தின்படி ஐஎன்எஸ் நீலகிரி போர்க்கப்பல் கடந்த ஜனவரியில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் விழாவில் ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் ஹிம்கிரி ஆகிய போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட உள்ளன.
இரு போர்க்கப்பல்களும் 488 அடி நீளம், 58 அடி அகலம் கொண்டதாகும். இவற்றின் எடை 6,670 டன் ஆகும். இந்த போர்க்கப்பல்களில் பிரம்மோஸ் ஏவுகணைகள், பரக் ஏவுகணைகள், 76 எம்எம் துப்பாக்கிகள், நீர்மூழ்கிகளை அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த ஆயுதங்கள் மூலம் எதிரிகளின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள், எதிரிகளின் கடற்படைத் தளங்களை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.
இதுகுறித்து இந்திய கடற்படை வட்டாரங்கள் கூறியதாவது: இந்திய பெருங்கடலில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் சீனாவுக்கு இணையாக இந்திய கடற்படையின் பலத்தை அதிகரிக்க மத்திய அரசு அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக உள்நாட்டிலேயே போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள் கட்டப்பட்டு கடற்படையில் அடுத்தடுத்து இணைக்கப்பட்டு வருகின்றன. ‘புராஜக்ட் 17ஏ' திட்டத்தில் மொத்தம் 7 போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு உள்ளன. இதில் ஐஎன்எஸ் நீலகிரி ஏற்கெனவே கடற்படையில் இணைக்கப்பட்டு விட்டது. விசாகப்பட்டினத்தில் ஆகஸ்ட் 26-ம் தேதி நடைபெறும் விழாவில் மேலும் 2 போர்க்கப்பல்கள் இணைக்கப்பட உள்ளன. மீதமுள்ள 4 போர்க்கப்பல்கள் அடுத்த ஆண்டுக்குள் கடற்படையில் இணைக்கப்படும். இவ்வாறு கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT