Last Updated : 26 Aug, 2025 08:58 AM

 

Published : 26 Aug 2025 08:58 AM
Last Updated : 26 Aug 2025 08:58 AM

‘நிக்கிக்கு நீதி வேண்டும்’... நாட்டை உலுக்கிய நொய்டா வரதட்சணை கொடுமை சம்பவம் - நடந்தது என்ன?

கிரேட்​டர் நொய்டாவில் வரதட்சணை கொடுமையால், ஆறு வயது மகன் கண்முன்னே இளம்பெண் நிக்கி தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகு​தி​யைச் சேர்ந்​தவர் விபின். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நிக்கி என்ற பெண்ணை திரு​மணம் செய்து கொண்​டார். இந்த தம்​ப​திக்கு 6 வயதில் மகன் உள்​ளார். விபின் ​ - நிக்கி திரு​மணத்​தின்​போது பெண்​ வீட்​டார் சொகுசு கார், பல சவரன் நகை உள்ளிட்டவற்றை வரதட்​சணை​யாக கொடுத்​துள்​ளனர். இருப்​பினும், அது போ​தாது என கூறி கூடுதலாக ரூ.36 லட்​சம் பணம் கேட்டு நிக்​கி​யின் கணவர் மற்​றும் அவரது குடும்பத்​தினர் பல ஆண்​டு​களாக நிக்கியை அடித்து துன்​புறுத்தி வந்​துள்​ளனர்.

இந்த நிலை​யில், கடந்த வியாழக்​கிழமை இரவு கணவன் - மனை​விக்கு இடையே வரதட்​சணை தொடர்​பாக மீண்​டும் சண்டை வந்​துள்​ளது. அப்போது, விபின் தனது தாயுடன் சேர்ந்து நிக்​கியை அடித்து துன்​புறுத்​தி​யதுடன் அவரை தீ வைத்து எரித்து கொடூர​மாக கொலை செய்​தார். இந்த சம்பவம் அவரது 6 வயது மகன் கண் முன்னே நடந்​துள்​ளது.

நிக்கியை விபினும் அவரது தாயும் சேர்ந்து அடித்து துன்புறுத்தும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மற்றொரு வீடியோவில் உடலில் தீ வைக்கப்பட்ட நிலையில் நிக்கி, மாடிப்படியில் இறங்கி வருகிறார். இந்த வீடியோக்களில் அதே வீட்டில் திருமணம் செய்துள்ள நிக்கியின் அக்கா காஞ்​சன் எடுத்​துள்​ளார்.

பலநாட்களாக 36 லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு தங்களை விபின் குடும்பத்தினர் துன்புறுத்தி வந்ததாகவும், நிக்கியின் உடலில் ஆசிட்டை ஊற்றியும், கழுத்துப் பகுதியில் அடித்தும் அவர்கள் சித்ரவதை செய்ததாக காஞ்சன் கூறுகிறார். தனது தாய் தன் கண் முன்னே கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பார்த்த ஆறு வயது மகன் போலீசாரிடம் அதனை வாக்குமூலமாக அளித்துள்ளார். அந்த சிறுவன் பேசும் காணொலிகள் இதயத்தை நொறுக்குவதாக உள்ளன.

இதனையடுத்து நிக்​கி​யின் இறப்​புக்கு காரண​மான விபின் உடனடி​யாக போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்​டார். அவரது பெற்​றோர் மற்​றும் சகோதரர் தலைமறை​வாகனர். நிக்கியை எரித்துக் கொல்ல பயன்படுத்தப்பட்ட திரவத்தை மீட்க அழைத்துச் சென்றபோது போலீ​ஸின் பிடி​யில் இருந்து தப்பிக்க முயற்சி செய்த விபினை நோக்கி போலீ​ஸார் துப்​பாக்​கி​யால் சுட்​டனர். இதில், அவரது காலில் குண்​டடிபட்​டது. இதனையடுத்து போலீஸார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் தலைமறைவாகியிருந்த விபினின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் மூவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். மருத்துவமனையில் உள்ள விபினிடம் நடத்திய முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, கடந்த ஆகஸ்ட் 21 அன்று நிக்கி - விபின் இடையில் ஏற்பட்ட சண்டைக்கு காரணம், நிக்கி சமூக வலைதளங்களில் தொடர்ந்து ரீல்ஸ் பதிவிட்டு வந்ததும், தான் நடத்தி வந்த பியூட்டி பார்லரை மீண்டும் திறக்க அவர் விரும்பியதும்தான் என்று போலீஸார் கூறுகின்றனர்.

நிக்கியின் விருப்பதுக்கு விபின் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஒருகட்டத்தில் நிக்கியை தனது தாயுடன் சேர்ந்து சரமாரியாக தாக்க தொடங்கியிருக்கிறார் விபின். பின்னர் அவர் மீது ஆசிட் போன்ற ஒரு திரவத்தை ஊற்றி தீ வைத்து எரித்திருக்கிறார்.

மனைவியை கொன்றது குறித்து விபினிடம் எந்த வருத்தமோ குற்ற உணர்ச்சியோ இருப்பதாக தெரியவில்லை என போலீஸார் கூறுகின்றனர். நிக்கியும் அவரது சகோதரி காஞ்சனும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இயங்கி வந்துள்ளனர். ‘மேக் ஓவர் பை காஞ்சன்’ என்ற பெயரிலான யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மேக்-அப், அழகுக் குறிப்புகள் தொடர்பான ரீல்களை பகிர்ந்து வந்துள்ளனர். இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நிக்கி, காஞ்சன் இருவரும் ஒரே குடும்பத்தில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டனர். விபினின் அண்ணனை காஞ்சன் திருமணம் செய்திருக்கிறார். திருமணமான இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சொகுசு கார், பணம் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கேட்டுப் பெற்றுள்ளது விபின் குடும்பம்.

திருமணமான இந்த 9 ஆண்டுகளில் நிக்கி பலமுறை தாய் வீட்டுக்கு விரட்டியடிக்கப்பட்டதாக காஞ்சன் கூறுகிறார். காஞ்சனும் பலமுறை அடித்துத் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். ஆனால் அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதால் ஒரு கட்டத்துக்குப் பிறகு அவர் மீதான துன்புறத்தலை அவரது கணவர் குடும்பத்தினர் கைவிட்டுள்ளனர்.

நிக்கியின் கொலையைத் தொடர்ந்து நாடு முழுவதும் வரதட்சணை, குடும்ப வன்முறைக்கு எதிரான குரல்கள் சமூக வலைதளங்களில் வீரியமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன. #JusticeForNikki என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தில் திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா என்ற இளம்பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வரதட்சணை கொடுமையால் கிரேட்டர் நொய்டாவில் அரங்கேறியுள்ள இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x