Last Updated : 25 Aug, 2025 10:09 AM

10  

Published : 25 Aug 2025 10:09 AM
Last Updated : 25 Aug 2025 10:09 AM

‘விண்வெளிக்கு முதலில் சென்றது ஹனுமன்’ - பாஜக எம்.பி அனுராக் தாக்குர்

அனுராக் தாக்குர் | கோப்புப்படம்

புதுடெல்லி: ‘விண்வெளிக்கு முதலில் சென்றது யார்?’ என அண்மையில் மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது கேட்டுள்ளார் பாஜக எம்.பி அனுராக் தாக்குர். இமாச்சல் மாநிலத்தில் உள்ள உனா நகரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் இந்த கலந்துரையாடல் நடந்துள்ளது.

அவரது கேள்விக்கு ‘நீல் ஆம்ஸ்ட்ராங்’ என மாணவர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் பதில் சொல்ல, ‘நான் ஹனுமன் என உணர்கிறேன்’ என அனுராக் தாக்குர் தெரிவித்தார். அதுதான் இப்போது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

“விண்வெளிக்கு முதலில் சென்றது ஹனுமன் என நான் உணர்கிறேன். இது ஆயிரம் ஆண்டுகள் பழமையான நமது பாரம்பரியம், அறிவு, கலாச்சாரம் என முக்கியமானவற்றை காட்டுகிறது. இது நமக்கு தெரியவில்லை என்றால் பிரிட்டிஷ்காரர்கள் போதித்த பாடத்தோடு நாம் நின்று விடுவோம்.

பாட புத்தகத்தை கடந்து நமது அறிவை விரிவு செய்ய வேண்டும். இதை நான் பள்ளியின் முதல்வர் உட்பட அனைவரிடத்திலும் கேட்டுக் கொள்கிறேன். நமது தேசம், நமது மரபுகள், நமது அறிவு ஆகியவற்றைப் பாருங்கள் உள்ளிட்டவற்றை கவனியுங்கள். நீங்கள் அந்த திசையில் இருந்து பார்த்தால், உங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியவரும்” என அனுராக் தாக்குர் பேசி உள்ளார். தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இமாச்சலில் நடந்த பள்ளி நிகழ்வில் அவர் இப்படி பேசியுள்ளதாக தகவல்.

விண்வெளிக்கு முதலில் சென்றது யார்? - விண்வெளிக்கு முதன்முதலில் பயணம் மேற்கொண்டவர் என்ற பெருமையை ரஷ்யாவை சேர்ந்த யூரி ககாரின் பெற்றுள்ளார். கடந்த 1961-ல் அவர் பயணம் மேற்கொண்டார். அதன் பின்னர் 1969-ல் நிலவில் தரையிறங்கினார் அமெரிக்காவை சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x