Published : 25 Aug 2025 08:30 AM
Last Updated : 25 Aug 2025 08:30 AM
பகல்பூர்: பிஹார் வாக்காளர் பட்டியலில் பாகிஸ்தானியர்கள் 2 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து கடந்த 1956-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தான் பெண்கள் 2 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் பிஹாரில் மேற்கொண்ட தீவிர வாக்காளர் திருத்தப் பணியின் போதும், அவர்கள் இருவரின் வாக்காளர் அட்டைகள் சரிபார்க்கப்பட்டுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வில் இவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று தெரிந்துள்ளது. மேலும், தற்போது அவர்கள் வயது மூத்தவர்களாக இருப்பதாலும், வாக்காளர் தீவிர திருத்தப் பணிகளின் போது அவர்களால் சரியான தகவல்களை அளிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இருவரின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பகல்பூர் மாவட்ட ஆட்சியர் நவல் கிஷோர் சவுத்ரி கூறும்போது, ‘‘மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து எங்களுக்கு கிடைத்த சில தகவல்களை சரி பார்த்த போது, அந்த 2 பேரும் பாகிஸ்தானியர்கள் என்பது உறுதியானது. அதன்பிறகு அவர்களுடைய பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
பிஹார் மாநில பகல்பூர் மாவட்டம் டேங்க் லேன் பகுதியில் இப்துல் ஹாசன் என்பவரின் மனைவி இம்ரானா கானம் (எ) இம்ரானா காதூன், முகமது தப்ஜீல் அகமது என்பவரின் மனைவி பிர்தோசியா கானம் ஆகிய பெயர்களில் வாக்காளர் அட்டைகள் பெறப்பட்டுள்ளன. இந்த 2 பெண்களில் ஒருவர் 3 மாத விசாவிலும் மற்றொருவர் 3 ஆண்டு விசாவிலும் கடந்த 1956-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் தற்போது நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT