Published : 25 Aug 2025 07:25 AM
Last Updated : 25 Aug 2025 07:25 AM

இமாச்சலில் குழந்தைக்கு தடுப்பூசி போட ஆற்றை கடந்து ஆபத்தான பயணம் செய்த நர்ஸ்

இமாச்சல பிரதேசத்தில் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக சென்ற நர்ஸ், ஆற்றைக் கடக்க ஒரு பாறையிலிருந்து மற்றொரு பாறைக்கு தாவி குதித்தார்.

சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பல்வேறு பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மண்டி மாவட்டம் சுதார் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் நர்ஸாக பணி புரியும் கமலா தேவி (40), ஸ்வார் சுகாதார துணை மையத்துக்கான பொறுப்பையும் கூடுதலாக கவனிக்கிறார்.

இந்த மையத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தில் புதிதாக பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக உயிரைப் பணயம் வைத்து ஆற்றைக் கடந்து சென்றுள்ளார் தேவி. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. அதற்கு நடுவே ஆங்காங்கே பாறைகள் உள்ளன.

அந்த ஆற்றை கடப்பதற்காக, ஒரு கையில் காலணியையும் தோளில் பையையும் சுமந்தபடி ஒரு பாறையிலிருந்து மற்றொரு பாறைக்கு துணிச்சலாக தாவி குதிக்கிறார் தேவி. ஒரு வழியாக ஆற்றைக் கடந்து சென்று தடுப்பூசி போட்டு வந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் கமலா தேவியை பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து மாநில தலைமை மருத்துவ அதிகாரி தீபாலி சர்மா கூறும்போது, “குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக கமலா தேவி துணிச்சலுடன் செயல்பட்டுள்ளார். ஆனால், இதுபோன்று சிக்கலான பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் பயண ஏற்பாடுகளை நாங்கள் செய்து தருவோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x