Published : 24 Aug 2025 06:33 PM
Last Updated : 24 Aug 2025 06:33 PM
புதுடெல்லி: இஸ்ரோவின் முதல் விண்வெளி பயணமான ககன்யானில் செல்ல உள்ள விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதை உறுதிப்படுத்தும் முதல் ஒருங்கிணைந்த ஏர் டிராப் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள பதிவில், "ககன்யான் பயணத்தின் தொடக்கம் முதல் முடிவு வரையிலான முழுமையான ஒருங்கிணைந்த ஏர் டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரோ, இந்திய விமானப்படை, டிஆர்டிஓ, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் கீழ் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளிப் பயணத்தில் மேலே புறப்படுவது முதல் பத்திரமாக கீழே தரையிறங்குவது வரை அனைத்துமே விண்வெளி வீரர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கீழே இறங்கும்போது, உரிய நேரத்தில் பாராசூட் விரிவடைந்து விண்வெளி வீரர்களை அது பத்திரமாக தரையிறக்க வேண்டும். இதை உறுதிப்படுத்தும் நோக்கில் 5 டன் எடையுள்ள போலி குழுக்கள் மேலே அனுப்பப்பட்டு பிறகு பாராசூட் மூலம் பத்திரமாக கீழே இறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சி வெற்றி பெற்றிருப்பது, ககன்யான் திட்டத்தில் மிக முக்கிய மைல்கலாகப் பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ககன்யானில் பங்கேற்கவுள்ள குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, குரூப் கேப்டன் பி.பி. நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப் ஆகியோரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி கவுரவித்தார். இந்த நிகழ்வில் பேசிய ராஜ்நாத் சிங், "நான்கு ககன்யான் விண்வெளி வீரர்களும் நாட்டின் ரத்தினங்கள், தேசிய லட்சியங்களின் முன்னோடிகள்.
இந்தியா விண்வெளியை ஆராய்ச்சிக்கான ஒரு துறையாக மட்டும் பார்க்கவில்லை. நாளைய பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் எதிர்காலம் என அனைத்துமாக அதை இந்தியா பார்க்கிறது. பூமியின் மேற்பரப்பைத் தாண்டி விண்வெளியின் புதிய எல்லைகளுக்குள் நாம் சீராக முன்னேறி வருகிறோம்.
சந்திரனில் இருந்து செவ்வாய் வரை நமது இருப்பையும் ஆய்வுகளையும் நாம் ஏற்கெனவே விரிவுபடுத்தியுள்ளோம். இப்போது ககன்யான் போன்ற திட்டங்களுக்கு நாடு முழுமையாக தயாராக உள்ளது.
இந்த சாதனை வெறும் தொழில்நுட்ப மைல்கல் மட்டுமல்ல. தற்சார்பு பாரதத்தில் இது ஒரு புதிய அத்தியாயம். உலகின் முன்னணி விண்வெளி சக்திகளில் ஒன்றாக இந்தியா பெருமையுடன் உயர்ந்து நிற்கிறது. இந்தியாவின் விண்வெளித் திட்டம் ஆய்வகங்கள், ஏவுதள வாகனங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இது நமது தேசிய விருப்பங்கள், உலகளாவிய பார்வை ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும்.
சந்திரயான் முதல் மங்கள்யான் வரை, மன உறுதியால் மிகவும் சவாலான இலக்குகளை குறிப்பிடத்தக்க சாதனைகளாக மாற்ற முடியும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது.
குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவின் வெற்றிகரமான விண்வெளிப் பயணம் அசாதாரண சாதனை. இது வெறும் தொழில்நுட்ப சாதனை மட்டுமல்ல, நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பின் செய்தி" என்று தெரிவித்தார்.
இந்தப் பாராட்டு விழாவில் முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான், விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏபி சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT