Last Updated : 24 Aug, 2025 05:38 PM

 

Published : 24 Aug 2025 05:38 PM
Last Updated : 24 Aug 2025 05:38 PM

வாக்காளராக பதிய ஆதார் மட்டுமே போதுமானது என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை: பாஜக

புதுடெல்லி: வாக்காளராக பதிய ஆதார் மட்டுமே போதுமானது அல்ல என்று தெரிவித்துள்ள பாஜக, உச்ச நீதிமன்றம் இதை உறுதிப்படுத்தி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதற்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சிறப்பு தீவிர திருத்தத்தில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், தகுதி வாய்ந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் வாக்கு திருட்டு நடப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார்.

இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் அமித் மால்வியா, “வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கக்கோரி விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் ஒரு மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது. இதுவரை 84,305 பேர் மட்டுமே விண்ணப்பத்திருக்கிறார்கள். நீக்கப்பட்டவர்களில் இது வெறும் 1.3 சதவீதம் மட்டுமே. இயல்பாக நிகழக்கூடிய தவறுகளின் வறம்பைவிட இது மிகக் குறைவு.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, ஒருவர் இந்திய குடிமகனாக இல்லாவிட்டாலோ, மனநிலை சரியில்லாதவர் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருந்தாலோ, தேர்தல் முறைகேடு சட்டங்களின்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தாலோ அவர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற முடியாது.

ஆதார் என்பது அடையாளம் மற்றும் வசிப்பிடத்துக்கான சான்று மட்டுமே. அது இந்திய குடியுரிமை ஆவணம் அல்ல. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நினைப்பவர்கள், ஆதாருடன் வேறு சில ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். அப்போதுதான், அது செல்லுபடியாகும். வாக்களிக்கும் உரிமையைப் பெற ஆதார் மட்டுமே செல்லுபடியாகும் ஆவணமாக இருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை.

ஆனால், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆதார் மட்டுமே போதும் என அறிவிக்க தேர்தல் ஆணையத்தை கோருவது ஆர்பி சட்டத்தின் பிரிவு 16 மற்றும் ஆதார் சட்டத்துக்கு எதிரானது. உச்ச நீதிமன்றம் ஏற்காத ஒன்றை ஏற்கச் சொல்லி வலியுறுத்துவது நீதிமன்ற அவமதிப்பு.

உண்மை என்னவென்றால், சிறப்பு தீவிர திருத்தம் அப்படியே செயல்படுகிறது. ஆதார் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பதிய போதுமானது அல்ல. இறந்தவர்கள், போலிகள், வங்கதேசத்தவர்கள், மியான்மரின் ரோஹிங்கியாக்கள் ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். இந்திய குடிமக்கள் மட்டுமே அடுத்த அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பார்கள்; வெளிநாட்டினர் அல்ல.

ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் திட்டமிட்ட ரீதியில் அவதூறுகளை பரப்பி வருகின்றன. வாக்கு திருட்டு என்ற அழுகுரல் திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட ஒன்று” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x