Published : 24 Aug 2025 04:59 PM
Last Updated : 24 Aug 2025 04:59 PM
திருவனந்தபுரம்: சபரிமலையின் அடிவாரமான பம்பையில் நடைபெற உள்ள உலக ஐயப்ப சங்கமத்தில் கலந்து கொள்வதற்கு முன் பினராயி விஜயனும் மு.க. ஸ்டாலினும் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேரள பாஜக தலைவர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
உலக ஐயப்ப சங்கமம் நிகழ்ச்சி, பம்பையில் வரும் செப்டம்பர் 20ம் தேதி நடைபெற உள்ளது. கேரள அரசும், திருவாங்கூர் தேவசம் போர்டும் இணைந்து நடத்தும் இவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். திருவாங்கூர் தேவசம் போர்டின் 70-ம் ஆண்டை முன்னிட்டு விழா நடைபெற உள்ளது. தேவசம்போர்டு அமைச்சர் வி.என்.வசவன், மு.க. ஸ்டாலினை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். இதில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்விழாவில் கலந்து கொள்வதற்கு முன் பினராயி விஜயனும் மு.க. ஸ்டாலினும் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்றும் கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பினராயி விஜயனுக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் கேரள மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களின் ஒரு தெளிவான செய்தி இது.
நீங்கள் இருவரும் பல ஆண்டுகளாக சபரிமலை, ஐயப்ப பக்தர்கள், இந்து நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீங்கு விளைவித்து அவமதித்துள்ளீர்கள். பினராயி விஜயன் பல ஐயப்ப பக்தர்களை சிறையில் அடைத்துள்ளார். மேலும் பலர் மீது வழக்குகளை பதிவு செய்துள்ளார். ஐயப்ப பக்தர்கள் மீது காவல்துறை வன்முறையை ஏவியுள்ளார். இவை மட்டுமின்றி, சபரிமலையின் புனித மரப்புகளை மீறியுள்ளார், அவமதித்துள்ளார்.
மு.க. ஸ்டாலினும் அவரது பயனற்ற வாரிசும் மீண்டும் மீண்டும் இந்தக்களை அவமதித்துள்ளனர். இந்து நம்பிக்கைகளை வைரஸ் என்று குறிப்பிட்டுள்ளனர். இவை ஒவ்வொரு இந்துவின் நினைவிலும் ஆழமாகப் பதிந்துள்ளன. அவற்றை ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது.
தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் கேரள இடதுசாரி அரசு ஐயப்ப சங்கமம் நிகழ்ச்சியை நடத்துவது ஒரு நாடகம், மக்களை முட்டாளாக்கும் உத்தி.
பினராயி விஜயனும் ஸ்டாலினும் ஐயப்ப சங்கமத்தில் பங்கேற்க ஒரே வழி, இந்துக்களிடமும் சபரிமலை ஐயப்ப பக்தர்களிடமும் மன்னிப்பு கேட்பதுதான். பினராயி விஜயன் ஐயப்ப பக்தர்கள் மீது போட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். சிறையில் அடைக்கப்பட்ட பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சபரிமலை மரபுகளை மீறியதற்காக ஐயப்பனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும.
ஸ்டாலினும் அவரது பயனற்ற வாரிசு உதயநிதியும் கேரளாவுக்கு வர விரும்பினால் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மன்னிப்பு கேட்காமல், பினராயி விஜயனோ, ஸ்டாலினோ சபரிமலை பக்தர்களின் நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்தி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கேரள பாஜகவின் ஒவ்வொரு தொண்டனும் வெளியே வந்து தடுத்து நிறுத்துவார்கள். இந்த விஷயத்தில் எங்கள் மன உறுதியை குறைத்து மதிப்பிடாதீர்கள். எங்களை தூண்டாதீர்கள்" என தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள மற்றொரு பதிவில், "ஹிட்லர் யூதர்களைக் கொண்டாடுவடுவது, ராகுல் காந்தி உண்மை பேசுவது, ஒசாமா பின்லேடன் அமைதியின் தூதுவரக மாறுவது, ஹமாஸ் / ஜமாத் இஸ்லாமியர்கள் பிற மதங்களைச் சேர்ந்த மக்களை மதிப்பது, காங்கிரஸும் இண்டியா கூட்டணியும் வாரிசு அரசியலையும் ஊழலையும் கைவிடுவது போன்றது காங்கிரஸ், திமுக, சிபிஎம் போன்ற இண்டியா கூட்டணி கட்சிகள் சபரிமலை நிகழ்ச்சிக்குச் செல்வது” என்று விமர்சித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT