Last Updated : 24 Aug, 2025 02:45 PM

 

Published : 24 Aug 2025 02:45 PM
Last Updated : 24 Aug 2025 02:45 PM

பிஹார் SIR: 98% வாக்காளர்கள் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர் - தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: பிஹார் மாநிலத்தில் 98.2 சதவீத வாக்காளர்களின் ஆவணங்களை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளதாகவும், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியினை முன்னிட்டு வெளியிடப்பட்ட பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் மக்கள் உரிமை கோரவும், ஆட்சேபனை தெரிவிக்கவும் இன்னும் 8 நாட்கள் உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் இன்று கூறியுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து செப்டம்பர் 1-ம் தேதி வரை ஆட்சேபனை தெரிவித்து, அதை சரி செய்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த காலகட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை திருத்துவது மட்டுமின்றி தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் போது அதற்கான படிவத்துடன் மக்கள் சமர்ப்பிக்க தவறிய ஆவணங்களையும் சமர்ப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

இந்நிலையில், ஜூன் 24 முதல் ஆகஸ்ட் 24-ம் தேதி வரையிலான 60 நாட்களில் சுமார் 98.2 சதவீத வாக்காளர்கள் தங்களது ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர் என்று தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதை பிஹார் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்த தகவலின் அடிப்படையில் கூறியுள்ளது. வரும் செப்டம்பர் 1-ம் தேதிக்குள் எஞ்சியுள்ள 1.8 சதவீத வாக்காளர்கள் தங்களது ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, வாக்காளர்களிடமிருந்து ஏற்கெனவே குறிப்பிட்ட 11 ஆவணங்கள் அல்லது ஆதார் அட்டையின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரும் மக்களின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது குறிப்பிடத்தக்கது.

பிஹார் தேர்தலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியும்: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 1-ம் தேதி அன்று வெளியிட்டது.

பிஹார் மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) கடந்த ஜூலை மாதம் தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வந்தது. இந்த நடவடிக்கையின் போது பிஹாரில் இறந்து போனவர்கள், நிரந்தரமாக முகவரி மாற்றம் செய்தவர்கள் என ஆயிரக்கணக்கானோரை கண்டுபிடிக்க முடியவில்லை.

கடந்த ஜூலை 25-ம் தேதி தேர்தல் ஆணையம் கூறுகையில், “பிஹாரில் 35 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை கண்டறிய முடியவில்லை. அவர்கள் நிரந்தரமாக இடம்பெயர்ந்திருக்கலாம்” என்று தெரிவித்தனர். இதற்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்​நிலை​யில், பிஹார் வரைவு வாக்​காளர் பட்​டியலை தலைமை தேர்​தல் ஆணை​யம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியிட்டது. பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் செய்​வதற்கு முன்​னர், கடந்த ஜூன் மாதம் 7.93 கோடி வாக்​காளர்​கள் இருந்​தனர். ஆனால், வாக்​காளர்​களின் மொத்த எண்​ணிக்கை குறித்து இதில் தகவல் வெளி​யிடப்​பட​வில்​லை. தேர்​தல் ஆணை​யத்​தின் அதி​காரப்​பூர்வ இணை​யதளத்​தில் இந்த வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

வாக்​காளர்​கள் இந்​தப் பட்​டியலில் தங்​கள் பெயர்​களைச் சரி​பார்க்​கலாம். பெயர்​கள் விடு​பட்​டிருந்​தால் பெயர்​களைச் சேர்க்க கோரிக்கை விடுக்​கலாம். மேலும், இந்தப் பட்​டியல் அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிகளுக்​கும் வழங்​கப்​படும் என்று ஏற்​கெனவே ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. பட்​டியலில் திருத்​தம் இருந்​தால், அது தொடர்​பாக அவர்​கள் கோரிக்கை விடுக்​கலாம். செப்​டம்​பர் 1-ம் தேதி வரை ஆட்​சேபனை​கள் தெரி​வித்து சரி செய்து கொள்​ளலாம் என்று தேர்​தல் ஆணை​யம் ஒரு மாதம் அவகாசம் அளித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x