Published : 24 Aug 2025 12:48 PM
Last Updated : 24 Aug 2025 12:48 PM
நொய்டா: நொய்டாவில் வரதட்சணைக் கொடுமையால் இளம் பெண் ஒருவர் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் தந்தை ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டி கண்கலங்கவைக்கும் வகையில் உள்ளது.
உயிரிழந்த இளம் பெண்ணின் தந்தை அளித்தப் பேட்டி: “முதலில் சொகுசுக் கார் வேண்டும் என்றார்கள். வாங்கிக் கொடுத்தோம். பின்னர் புல்லட் வண்டி வேண்டும் என்றார்கள். அதுவும் வாங்கிக் கொடுத்தோம். ஆனால் தொடர்ந்து என் மகளை கொடுமைப் படுத்தியுள்ளனர். அண்மையில் நான் எனக்காக ஒரு சொகுசுக் கார் வாங்கினேன். அதனால் என் மருமகன் விபினுக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது. அதைச் சொல்லிக் காட்டியே என் மகளை கொடுமைப் படுத்தியுள்ளனர். என் பேரனின் கண் முன்னாலேயே என் மகளை அடித்துத் துன்புறுத்தி எரித்துக் கொன்றனர். என் மூத்த மகளையும் அதே குடும்பத்தில் தான் திருமணம் செய்து கொடுத்துள்ளோம்.
என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். உ,பி. அரசு குற்றவாளிகள் அனைவரையும் என்கவுன்ட்டர் செய்ய வேண்டும், விபினின் வீட்டை புல்டோசர் விட்டு தரைமட்டமாக்க வேண்டும். இது யோகி அரசு. இந்த அரசு என் மகளுக்கு நீதி செய்யும் என்று நம்புகிறேன்.” என்றார்.
இதற்கிடையில் பெண்ணை எரித்துக் கொன்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். கணவன் குடும்பத்தின் மற்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சம்பவம் குறித்து உயிரிழந்த பெண்ணின் 6 வயது மகன், “அவர்கள் என் அம்மாவை அடித்தார்கள். அவர் மீது எதையோ ஊற்றினார்கள். பின்னர் அவர் கன்னத்தில் அறைந்தார்கள். அப்புறம் அவர் மீது தீ பற்ற வைத்தார்கள்.” என்று போலீஸிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
உயிரிழந்த இளம் பெண் நிக்கியின் அக்காவும் கொலையை செய்தது தனது அக்காவின் கணவர் தான் என்று சாட்சியம் அளித்துள்ளார். மேலும் ரூ.36 லட்சம் வரதட்சணைக்காக இந்தக் கொலை நடந்ததாக தெரிவித்தார். இதற்கிடையே நிக்கியை ஒரு ஆணும், பெண்ணும் அடித்து இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT