Published : 24 Aug 2025 06:16 AM
Last Updated : 24 Aug 2025 06:16 AM
மும்பை: ரூ.2,929 கோடி மோசடி தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து ரூ.2,929 கோடி கடன் பெற்றது. இந்த கடனை திருப்பி செலுத்தவில்லை. இதுதொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் மும்பை கிளை சார்பில் சிபிஐ-யிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சிபிஐ அதிகாரிகள் நேற்று வழக்கு பதிவு செய்து அனில் அம்பானிக்கு சொந்தமாக மும்பையின் கஃபே பரேட் பகுதியில் உள்ள வீடு மற்றும் அவரது நிறுவனங்களில் சோதனை நடத்தினர். இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: அரசு மற்றும் தனியார் வங்கிகள் சார்பில் அனில் அம்பானி நிறுவனங்கள் மீது பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் பேரில் வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.
அந்த வகையில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் அனில் அம்பானி நிறுவனங்கள் மீது ரூ.2,929 கோடி மோசடி புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக அனில் அம்பானியின் வீடு மற்றும் அவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்களில் சோதனை நடத்தி உள்ளோம். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்து உள்ளன. இதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். அனில் அம்பானி நாட்டை விட்டு வெளியேறாத வகையில் ஏற்கெனவே ‘லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
பாரத ஸ்டேட் வங்கி வட்டாரங்கள் கூறியதாவது: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து பெற்ற கடன்களில் ரூ.31,580 கோடியை முறைகேடாக பயன்படுத்தி உள்ளது. குறிப்பாக அனில் அம்பானியின் பல்வேறு நிறுவனங்களின் கடன்களை அடைக்க ரூ.13,667 கோடி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சுமார் ரூ.12,692 கோடி அனில் அம்பானியின் இதர நிறுவனங்களுக்கு முறைகேடாக மாற்றப்பட்டு உள்ளது. தற்போது ரூ.2,929 கோடி மோசடி குறித்து சிபிஐயிடம் புகார் அளித்துள்ளோம். முறையான அனுமதிகளை பெற்ற பிறகு அடுத்தடுத்து பல்வேறு புகார் மனுக்களை சிபிஐயிடம் அளிப்போம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT