Published : 23 Aug 2025 12:57 PM
Last Updated : 23 Aug 2025 12:57 PM
பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி குறித்த எனது பதிவுக்காக மகாராஷ்டிர போலீஸார் என் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது பற்றி பயப்படவில்லை என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. நேற்று (வெள்ளிக்கிழமை ) பிஹார் மாநிலம் கயாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ரூ.12,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கிவைத்தார்.
அப்போது பேசிய அவர், “பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியில் இருந்த காலத்தை நினைத்துப் பாருங்கள். இந்த பிராந்தியம் சிகப்பு தீவிரவாதத்தின் பிடியில் சிக்கி இருந்தது. கயா போன்ற நகரங்கள் இருளில் தள்ளப்பட்டன ஒட்டுமொத்த மாநிலத்தையும் அவர்கள் இருளில் தள்ளினர். கல்வி இல்லை, வேலைவாய்ப்பு இல்லை எனும் நிலையில், பல தலைமுறையினர் வேறு வழியின்றி மாநிலத்தைவிட்டு வெளியேறினர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் பிஹார் மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்த்தது. அவர்களின் வாழ்க்கைக்கோ, அவர்கள் சந்தித்த துயரங்களுக்கோ அது எதையும் செய்யவில்லை.” என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஆட்சேபகரமான பதிவு ஒன்றினை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது அந்த பதிவு குறித்து மகாராஷ்டிராவின் கட்சிரோலி பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ மிலிந்த் நரோட், காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து, தேஜஸ்வி யாதவ்க்கு எதிராக பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 196 (வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல்), 356 (அவதூறு), 352 (அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கில் அவமதித்தல்) மற்றும் 353 (பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அறிக்கைகள்) ஆகியவற்றின் கீழ் போலீஸார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளனர்.
இது குறித்த கேள்விக்கு இன்று (சனிக்கிழமை) பதில் அளித்த தேஜஸ்வி யாதவ், "முதல் தகவல் அறிக்கை பற்றி யாருக்கு பயம்? வெற்றுப் பேச்சு என்ற வார்த்தையை பயன்படுத்தியது ஒரு குற்றமா? அவர்களள் உண்மையைக் கண்டு அஞ்சுகிறார்கள். முதல் தகவல் அறிக்கைக்காக நாங்கள் பயப்படவில்லை. நாங்கள் உண்மையை தொடர்ந்து பேசுவோம்.” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT