Published : 23 Aug 2025 07:36 AM
Last Updated : 23 Aug 2025 07:36 AM
புதுடெல்லி: தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க கூடாது. அவற்றுக்கு கருத்தடை, தடுப்பூசி போட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஆனால், தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் சுமார் 8 லட்சம் தெரு நாய்கள் இருக்கும் என்று பொதுநல அமைப்பு ஒன்று கணக்கிட்டுள்ளது. அவை அனைத்துக்கும் கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுவதற்கு அவ்வளவு தொகையை ஒதுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய சுமார் ரூ.2,400 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இத்துடன், தெரு நாய்களை பிடிப்பது, கருத்தடை செய்வதற்கு போதுமான கால்நடை மருத்துவர்கள், ஊழியர்கள் தேவையும் உள்ளன. கருத்தடை செய்வதற்கான தனி மையங்கள் அமைக்க வேண்டிய செலவும் உள்ளது. ரூ.2,400 கோடி என்பது கருத்தடை செய்வதற்கான செலவு மட்டும்தான். தவிர கருத்தடைக்கு பிறகு நாய்களை பராமரிக்க வேண்டிய செலவும் உள்ளது.
இதுகுறித்து டெல்லியில் உள்ள சிறு விலங்கு கால்நடை சங்கத்தின் உறுப்பினர் டாக்டர் சிவம் படேல் கூறுகையில், ‘‘ஆண் நாய்கள், பெண் நாய்கள் என தனித் தனியாக கருத்தடை செய்ய வேண்டும். மேலும் ஆண் நாய், பெண் நாய்களின் கருத்தடைக்கான செலவு, குணப்படுத்துதலில் வேறுபாடுகள் உள்ளன’’ என்றார்.
ஆண் நாய்களுக்கு 4 மாதங்கள் முதல் 1.5 வயது வரையிலான காலமே கருத்தடை செய்வதற்கு சிறந்தது. எனினும், 1.5 ஆண்டுகளுக்குப் பிறகும் கருத்தடை செய்ய முடியும் எனக் கூறுகின்றனர். மேலும், ஆண் நாய்களுக்கு ரத்தப் பரிசோதனை, உயிரணுக்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு என 3 கட்டங்களாக இதை அமல்படுத்த வேண்டும்.
இதற்கு 3 முதல் 5 நாட்கள் வரை ஆகும். மேலும் ஒரு ஆண் நாய்க்கு ஆண்மை நீக்கத்துக்கு குறைந்தபட்சம் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை செலவாகும். 6 மாதங்களுக்கு பிறகே பெண் நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியும். மேலும் ஆண் நாய்களை விட கருத்தடை செலவும் அதிகமாகும். அவற்றுக்கு குறைந்தது ரூ.8,000 முதல் ரூ. 9,000 வரை செலவாகும். இதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்துவதில் டெல்லி அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT