Published : 23 Aug 2025 12:42 AM
Last Updated : 23 Aug 2025 12:42 AM
போபால்: மத்தியப் பிரதேசத்தில் போபால் அருகே உள்ளது ஜெகதிஸ்புரா என்ற கிராமம். மக்கள் குறைவாக வசிக்கும் இந்த கிராமத்தில் மிகப் பெரிய வீடு ஒன்று இருந்தது. இது எப்போதும் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது.
ரகசிய தகவலின் அடிப்படை யில், வருவாய் புலனாய்வுத்துறை இயக்குநரகம் கடந்த 16-ம் தேதி அந்த வீட்டில் சோதனை நடத்தியது. அங்கு 61 கிலோ திரவ மெபட்ரோன் என்ற போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.92 கோடி. இது போதைப் பொருட்கள் விற்கப்படும் தெருக்களில் ‘மியாவ் - மியாவ்’ என்ற ரகசிய குறியீட்டு பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், போதை மாத்திரைகள் தயாரிப்பதற்கான ரசாயனப் பொருட்கள் 541 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இங்கு போதைப் பொருள் தயாரித்து நாடு முழுவதும் கடத்துவதற்கு மும்பை தாதா தாவூத் இப்ராஹிம், அவனது கூட்டாளிகள் சலிம் ‘டோலா’ இஸ்மாயில், மற்றும் உமைத் - உர் -ரகுமான் போன்றவர்கள் பாகிஸ்தான் மற்றும் துபாயிலிருந்து பணம் அனுப்புவதாக வருவாய் புலனாய்வுத்துறையினர் நம்புகின்றனர். போதைப் பொருள் கடத்தல்காரர் இக்பால் மிர்சியின் கூட்டாளியாக இருந்த சலிம் டோலா, துருக்கியிலிருந்து மும்பை மற்றும் குஜராத்தில் உள்ள தாவூத் கும்பலில் பணியாற்றியவர்கள்
மூலமாக இந்த போதைப் பொருள் தொழிலை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஜெகதீஸ்புரா கிராமத்தில் உள்ள போதைப் பொருள் தொழிற்சாலையை பைசல் குரேஷி என்பவர் நடத்தி வருகிறார். மருந்து தயாரிப்பு துறையில் டிப்ளமோ முடித்துள்ள இவர் குஜராத்தைச் சேர்ந்தவர். இவரது கூட்டாளி ரசாக் கான்.
ஒரே சோதனையில் ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தாலும், இது பனிப்பாறையின் நுனி போன்றதுதான் என கூறும் புலனாய்வு அதிகாரிகள், இந்த தொழில் இன்னும் பல இடங்களில் நடைபெறலாம் என சந்தேகிக்கின்றனர். இதையடுத்து இதன் நெட்வொர்க் குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT