Published : 22 Aug 2025 11:37 AM
Last Updated : 22 Aug 2025 11:37 AM
புதுடெல்லி: டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை என தனது முந்தைய உத்தரவில் இருந்த கெடுபிடிகள் சிலவற்றை தளர்த்தி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
அதன்படி, “டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை. அவற்றைப் பிடித்து கருத்தடை சிகிச்சை செய்து, புழுக்கள் நீக்க மாத்திரைகள் கொடுத்துவிட்டு அவை எங்கே பிடிக்கப்பட்டனவோ அங்கேயே விட்டுவிடலாம். அதேவேளையில், ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்கள், ஆக்ரோஷமான தன்மையோடு இருக்கும் நாய்களை காப்பகங்களில் பராமரிக்க வேண்டும்.” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் 5 அம்சங்கள்>>
முன்னதாக, நாடு முழுவதும் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த செய்தி அறிக்கையை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கில் கடந்த 8-ம் தேதி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘டெல்லி, டெல்லி மாநகராட்சி, என்எம்டிசி ஆகியவை அனைத்து பகுதிகளில் இருந்தும், தெரு நாய்களை விரைவில் பிடிக்கத் தொடங்க வேண்டும். அதை எப்படிச் செய்வது என்பது பற்றி அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். அவர்கள் இதற்காக ஒரு படையை உருவாக்க வேண்டுமானால், அதை விரைவில் செய்யுங்கள்.
உடனடியாக அனைத்து பகுதிகளில் இருந்தும் தெரு நாய்களை கொண்டுவந்து காப்பகங்களில் அடைக்கவேண்டும். தற்போதைக்கு, மற்ற விதிகளை மறந்துவிடுங்கள்.
டெல்லியின் அனைத்து பகுதிகளிலும் உடனடியாக நாய் காப்பகங்களை கட்ட வேண்டும். இந்த காப்பகங்களில், நாய்களை கையாளக் கூடிய, கருத்தடை மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்கக் கூடிய நிபுணர்கள் இருக்க வேண்டும். எந்தக் காரணத்தை கொண்டும் இந்த நாய்களை வெளியே விடக்கூடாது. நாய்கள் இந்த காப்பகங்களில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்த சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும்.
நாய்க்கடி சம்பவங்கள் குறித்து புகாரளிக்க ஒரு ஹெல்ப்லைனைத் தொடங்கவேண்டும். டெல்லி தெருக்களை முற்றிலும் தெரு நாய்கள் இல்லாததாக மாற்ற வேண்டும். தெரு நாய்களைத் தத்தெடுக்கவும் அனுமதிக்க கூடாது’ என உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. குறிப்பாக விலங்குகள் நல ஆர்வலர்கள் தரப்பில் இந்த தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த புதிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT