Published : 22 Aug 2025 08:49 AM
Last Updated : 22 Aug 2025 08:49 AM
புதுடெல்லி: ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டில் செய்தி வெளியானதை தொடர்ந்து வெளிமாநில தமிழ்ச் சங்க பள்ளிகளுக்கு பாடநூல்களை தொடர்ந்து இலவசமாக அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாட்டின் பிற மாநிலங்களின் முக்கிய நகரங்களில் தமிழ்ச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த சங்கங்களாலும் தமிழ் கல்வி அமைப்புகளாலும் நடத்தப்படும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி மற்றும் தமிழ் பாடப்பிரிவுக்கு நூல்கள் தேவைப்படுகின்றன. இவை நீண்ட வருடங்களாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன.
இந்த இலவச விநியோகத்தை நடப்பு வருடம் முதல் தமிழ்நாடு அரசு ரத்து செய்திருந்தது. இது தொடர்பான செய்தி கடந்த 11-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டில் வெளியானது. இலவச விநியோகம் ரத்து செய்யப்பட்டதற்கு பரவலாக கண்டனம் எழுந்தது. இதன் தாக்கமாக, தற்போது தமிழ்நாடு அரசு தனது முடிவை மாற்றி இலவசப் பாடநூல் விநியோகத்தை தொடர முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் டெல்லியின் தமிழ்நாடு அரசு இல்ல அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “நிதிப் பற்றக்குறை காரணமாக தமிழ்நாடு பாடநூல் இலவச விநியோகம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான செய்தி இந்து தமிழ் திசை நாளேட்டில் வெளியாகி முதல்வர் ஸ்டாலின் கவனத்தைப் பெற்றது. இதனால், உடனடியாக ரத்து உத்தரவை மாற்றி மீண்டும் பாடநூல்கள் இலவசமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 18-ம் தேதி பிறப்பித்துள்ளது. இது தொடர்பான தகவல் அனைத்து தமிழ்ச் சங்கங்களுக்கும் கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தனர். இந்த நூல்களை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியல் பணிகள் கழகத்தின் சென்னை வட்டார அலுவலகம் மற்றும் அடையாறு கிடங்கில் பெற்றுக் கொள்ளுமாறும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நூல்களை பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான செலவு சுமார் ரூ.1 லட்சம் வரை ஆகிறது. இதையும் தமிழ்நாடு அரசே தனது செலவில் அனுப்பி வைத்தால் நல்லது என்ற கோரிக்கையும் வெளிமாநில சங்கங்கள் தரப்பில் உள்ளது. வெளி மாநிலங்களுக்கான இந்த பாடநூல்களின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT