Published : 22 Aug 2025 08:11 AM
Last Updated : 22 Aug 2025 08:11 AM
புதுடெல்லி: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், எவர்மன் நகரை சேர்ந்த பெண் சிண்டி ரோட்ரிக். இவருக்கும் மெக்ஸிகோவை சேர்ந்த மரியானோவுக்கும் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு அடுத்தடுத்து 7 குழந்தைகள் பிறந்தன. கடைசி ஆண் குழந்தை நோயல் ரோட்ரிக் (6).
இந்த சிறுவனுக்கு நரம்பு மண்டல பாதிப்பு, சுவாசக் கோளாறு, எலும்பு அடர்த்தி குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இருந்தன. இந்த சூழலில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறிய மரியானோ, மெக்ஸிகோவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதன்பிறகு இந்திய வம்சாவளியை சேர்ந்த அர்ஸ்தீப் சிங் என்பவரை, சிண்டி ரோட்ரிக் திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி முதல் 6 வயது சிறுவன் நோயல் ரோட்ரிக்கை காணவில்லை. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தியபோது, “சிறுவன் நோயல் அவனது தந்தை மரியானோவுடன் மெக்ஸிகோவில் வசிக்கிறான்” என்று சிண்டி தெரிவித்தார்.
அடுத்த சில நாட்களில் சிண்டி ரோட்ரிக், அவரது இந்திய வம்சாவளி கணவர் அர்ஸ்தீப் சிங், 6 குழந்தைகள் விமானத்தில் இந்தியாவுக்கு புறப்பட்டனர். இதன் பிறகு அவர்கள் தலைமறைவாகினர். இதற்கிடையில், மரியானோவிடம் நடத்திய விசாரணையில் நோயல் பிறப்பதற்கு முன்பே அவர் நாடு கடத்தப்பட்டது தெரியவந்தது.
மேலும், சிறுவனை ஒருமுறைகூட நேரில் பார்த்ததில்லை என்று போலீஸாரிடம் மரியானோ தெரிவித்தார். இந்த வழக்கை எப்பிஐ தீவிர விசாரணை நடத்தியபோது, சிறுவன் நோயல் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக நோயலின் தாய் சிண்டியை இண்டர்போல் உதவியுடன் எப்பிஐ போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். அமெரிக்காவின் முதல் 10 குற்றவாளிகளில் சிண்டியின் பெயர் 4-வதாக இடம்பெற்றது. அவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.2.18 கோடி பரிசு தொகை வழங்கப்படும் என்றும் எப்பிஐ அறிவித்தது. இந்த சூழலில் இந்தியாவில் தலைமறைவாக இருந்த சிண்டி சிபிஐ உதவியுடன் அண்மையில் கைது செய்யப்பட்டார். எப்பிஐ போலீஸார் இந்தியாவுக்கு வந்து சிண்டியை டெக்சாஸ் மாகாணத்துக்கு அழைத்துச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT