Published : 21 Aug 2025 06:04 PM
Last Updated : 21 Aug 2025 06:04 PM
புதுடெல்லி: தீபாவளி, சத் பண்டிகைகளுக்காக 12,000-க்கும் அதிகமான சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ரயில் பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், "தீபாவளி, சத் பண்டிகைகளின் போது பயணிகளின் வசதிக்காக 12,000-க்கும் அதிகமான சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. மேலும், அக்டோபர் 13 - 26 இடையேயான நாட்களில் பயணம் செய்வோருக்கும், நவம்பர் 17 - டிசம்பர் 1 இடையேயான நாட்களில் திரும்புவோருக்கும் கட்டணங்களில் 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்" என தெரிவித்தார்.
பிஹார் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி, நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ஜெய்ஸ்வால், மத்திய அமைச்சர் லாலன் சிங், நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் குமார் ஜா ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்ட அஸ்வினி வைஷ்ணவ், "பிஹாருக்கான சிறப்பு ரயில் திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். கயாவில் இருந்து டெல்லிக்கு, சஹர்சாவில் இருந்து அமிர்தசரஸ்க்கு, சாப்ராவில் இருந்து டெல்லிக்கு, முசாபர்பூரில் இருந்து ஹைதராபாத்துக்கு என 4 புதிய அம்ரித் பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
புத்தர் தொடர்பான முக்கிய இடங்களை உள்ளடக்கிய சுற்று ரயில் இயக்கப்பட உள்ளது. நடுத்தர வர்க்க மக்களை மனதில் கொண்டு இந்த ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ரயில், வைஷாலி, ஹாஜிபூர், சோனேபூர், பாட்னா, ராஜ்கிர், கயா, கோடெர்மா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்" என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT