Published : 21 Aug 2025 12:31 PM
Last Updated : 21 Aug 2025 12:31 PM
புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஜலாலாபாத் என்ற தாலுகாவின் பெயர் பரசுராம்புரி என மாறுகிறது. மத்திய அரசு அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
உ.பி.யின் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள மாவட்டம் ஷாஜஹான்பூர். இதன் ஒரு தாலுகாவின் பெயர் ஜலாலாபாத். இதன் பெயரை மாற்றக் கோரிக்கைகள் எழுந்தது. இதை ஏற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உபி அரசு அதற்கான நடவடிக்கையில் இறங்கியது. இதற்காக, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த ஜுன் 27 இல் ஒரு கடிதம் எழுதியிருந்தது.
இதை பரிசீலனை செய்த மத்திய உள்துறை அமைச்சகம் உபியின் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், உ.பி.யின் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஜலாலாபாத்தின் பெயரை பரசுராம்புரி என மாற்ற அனுமதித்துள்ளது.
உள்துறை அமைச்சகம் உ.பி. மாநில தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், ’உத்தரப் பிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள ’ஜலாலாபாத்’ நகரத்தின் பெயரை ’பரசுராம்புரி’ என மாற்றுவதற்கு இந்திய அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.’ எனக் குறிப்பிட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் இந்த ஒப்புதலுக்கு பிறகு, மத்திய அமைச்சரும் பிலிபித் பாஜக எம்பியுமான ஜிதின் பிரசாத் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் ஜிதின் பிரசாத் தனது சமூக ஊடக தளத்தில், ’உத்தரப் பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் உள்ள ஜலாலாபாத்தின் பெயரை 'பரசுராம்புரி' என மாற்ற அனுமதி அளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மனமார்ந்த நன்றி. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி, வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்! உங்கள் வழிகாட்டுதலிலும் தலைமையிலும் எடுக்கப்பட்ட இந்த முடிவு முழு சனாதன சமூகத்துக்கும் பெருமை சேர்க்கும் தருணத்தை அளித்துள்ளது.
பரசுராமரின் பாதங்களில் லட்சக்கணக்கான வணக்கங்கள். உங்கள் அருளால்தான் இந்தப் புனிதப் பணியில் நான் ஊடகமாக மாற முடிந்தது. உங்கள் ஆசீர்வாதம் உலகம் முழுவதும் நிலைத்திருக்கட்டும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
உ.பி.யில் தொடர்ந்து 2-வது முறையாக பாஜக ஆட்சி தொடர்கிறது. இது கடந்த 2017-ல் ஆட்சி அமைத்தது முதல் உபி நகரங்கள் மற்றும் மாவட்டங்களின் முஸ்லிம் பெயர்களில் பலவும் மாற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT