Published : 21 Aug 2025 11:45 AM
Last Updated : 21 Aug 2025 11:45 AM
புதுடெல்லி: டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து அவருக்கு இசட் பிரிவு சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பாதுகாப்பை ஏற்ற சிஆர்பிஎஃப்: மத்திய அரசின் ஒப்புதலை அடுத்து, டெல்லியில் உள்ள ரேகா குப்தாவின் இல்லத்துக்கு இன்று காலை சென்ற சிஆர்பிஎஃப் வீரர்கள், டெல்லி போலீசாரிடம் இருந்து பாதுகாப்பை தங்கள் வசம் எடுத்துக்கொண்டனர். முதல்வருக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய தலைநகரான டெல்லியில் நிலவும் அரசியல் பரபரப்பைக் கருத்தில் கொண்டு முதல்வரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இசட் பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன?: இசட் பிரிவு பாதுகாப்பு என்பது மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய பாதுகாப்புகளில் ஒன்றாக உள்ளது. அருகில் இருந்து பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகள், இடத்துக்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகள், வாகனம் மற்றும் துணை வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் உட்பட சுமார் 20 பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள். அதிக அச்சுறுத்தல் உள்ள நபர்களுக்கே இத்தகைய பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம்.
முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்: முதல்வர் ரேகா குப்தா டெல்லியில் உள்ள தனது இல்லத்தில், பொது மக்கள் குறைகேட்பு கூட்டத்தை நேற்று நடத்திக்கொண்டிருந்தபோது அங்கு வந்த குஜராத்தின் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் சக்ரியா என்பவர், முதல்வரிடம் புகார் மனு அளிப்பது போல் நெருங்கி திடீரென அவரை கன்னத்தில் அறைந்தார். முதல்வரை தள்ளிவிட்டபின், அவரது தலை முடியை பிடித்தும் இழுத்தார். அதற்குள் முதல்வரின் பாதுகாவலர்கள் பாய்ந்து சென்று ராஜேஷ் சக்ரியாவை பிடித்து மடக்கினர். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலில் காயம் அடைந்த டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
நாய்களை நேசிப்பவரா?: தாக்குதல் நடத்திய ராஜேஷ் சக்ரியாவின் தாய் பானு கூறுகையில், ‘‘எனது மகன் ராஜேஷ் நாய்களை நேசிப்பவர். டெல்லியில் தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த உத்தரவால், ராஜேஷ் கோபம் அடைந்தார். இதையடுத்துதான் அவர் டெல்லி சென்றார்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT