Published : 21 Aug 2025 07:21 AM
Last Updated : 21 Aug 2025 07:21 AM
புதுடெல்லி: இந்தியா - சீனா இடையே நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்க இரு நாடுகளும் முடிவெடுத்துள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு இந்தியா - சீனா இடையே 539 நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன. ஏர் இந்தியா, இண்டிகோ, சைனா சதர்ன், சைனா ஈஸ்டர்ன் விமானங்கள் இயக்கப்பட்டன.
அதன்பின் கடந்த 2020-ம் ஆண்டு கரோனா வைரஸ் தொற்று காரணமாக இரு நாடுகளிடையே சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்து கை கலப்பில் ஈடுபட்டனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையில் மீண்டும் சச்சரவு ஏற்பட்டது. இதனால் இந்தியா - சீனா நேரடி விமானப் போக்குவரத்து நடைபெறவில்லை.
இந்நிலையில், சீனா, இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிகபட்ச வரி விதித்துள்ளார். இதனால் இரு நாடுகளும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளன. சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ நேற்றுமுன்தினம் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். இதையடுத்து இந்தியா - சீனா இடையே விரைவில் நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, “சீனா வைப் பொறுத்தவரையில் நாளைக்கே விமானப் போக்குவரத்தைத் தொடங்க முடியும். ஆனால், இந்திய விமானங்களை சீனாவுக்கு இயக்குவதற்கு முன்னதாக சில நடைமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டி உள்ளது.
எனவே, இரு நாடுகளும் எப்போது விமானப் போக்குவரத்தைத் தொடங்க முடியுமோ, அப்போது தொடங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்காக நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு மாதத்துக்குள் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றனர்.
இந்தியா- சீனா இடையே விமான சேவை ஒப்பந்தம் (ஏஎஸ்ஏ) மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து இரு நாடுகளும் ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. அல்லது தற்போதுள்ள ஒப்பந்தத்தைப் பின்பற்றியே விமானங்களை இயக்கலாமா என்று ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சீனாவின் டியான்ஜின் நகரில் இந்த மாத இறுதியில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க சீனா செல்கிறார். அப்போது இரு நாடுகளிடையே நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT