Published : 21 Aug 2025 07:12 AM
Last Updated : 21 Aug 2025 07:12 AM
புதுடெல்லி: பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார். பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு குறித்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலரும், எம்.பி.யுமான பிரியங்கா காந்தி, கொடூரமான மசோதா என்று விமர்சித்துள்ளார். ஆனால் மசோதாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறும்போது, ‘‘நீங்கள் 30 நாள்கள் சிறையில் வைக்கப்பட்டால், அமைச்சராக தொடர முடியுமா? இது பொது அறிவு சார்ந்த ஒன்று. இதில் தவறு இருப்பதாக எதுவும் எனக்குத் தெரியவில்லை. இந்த மசோதாவை நாடாளுமன்றக் குழு ஆய்வுக்கு அனுப்புவது நல்ல விஷயம்தான். குழுவுக்குள் விவாதம் நடத்துவதுதான் ஜனநாயகத்துக்கு நல்லது. ஆகையால், விவாதத்தை நடத்துவோம்’’ என்றார்.
திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான சசி தரூர், அவ்வப்போது காங்கிரஸ் கட்சி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களின் நிலைப்பாட்டுக்கு மாறாக அண்மையில் கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதுகுறித்து அவரிடம் நிருபர்கள் `நீங்கள் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணையப் போகிறீர்களா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்ட போதிலும், அதனை அவர் முற்றிலுமாக மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT