Published : 20 Aug 2025 06:09 PM
Last Updated : 20 Aug 2025 06:09 PM
ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறைக்காவலில் வைக்கப்பட்டால் ஓர் அமைச்சரோ, ஒரு மாநில முதல்வரோ, ஏன் நாட்டின் பிரதமரோ பதவி பறிப்புக்கு உள்ளாக வழிவகை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வியாழக்கிழமையுடன் முடியவிருக்கும் நிலையில், செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட இந்த மசோதா மூலம் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது மத்திய அரசு.
இந்த மசோதாவை மக்களவையில், கடும் அமளி துமளிகளை மீறியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அப்போது, அந்த மசோதாவின் நகல்களை கிழித்து அவரது முகம் நோக்கி எறியப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. இந்த மசோதாவைப் பற்றியும், அதனை எதிர்க்கட்சிகள் ஏன் இவ்வளவு ஆவேசமாக எதிர்க்கின்றன என்பது பற்றியும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
இந்த மசோதாவின்படி, 5 ஆண்டுகளுக்கும் மேலான தண்டனை விதிக்கும் வகையிலான எந்தவொரு குற்றச்சாட்டின் கீழும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு, 30 நாட்களுக்கு சிறையில் இருந்தால், 31-வது நாளில் அவர்களை உரிய பரிந்துரையின்படி ஆளுநர் பதவி நீக்கம் செய்யலாம். பதவி நீக்கத்துக்காக பரிந்துரை செய்யப்படாத பட்சத்தில், சம்பந்தப்பட்டவரின் பதவி தானாகவே பறிபோகும்.
அதேபோல், ஒரு மத்திய அமைச்சரோ, பிரதமரோ கைது செய்யப்பட்டால், அவர்களைக் குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்யவும், அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படாவிட்டால், தானாகவே பதவி நீக்கம் ஆகும் வகையில் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்படுகிறது
இதை ஓர் உதாரணத்துடன் விளக்கம் வேண்டுமென்றால், கடந்த ஆண்டு கேஜ்ரிவால் கைதானதை எடுத்துக் கொள்ளலாம். டெல்லி மதுபான கொள்கை மோசடி தொடர்பாக அப்போதைய முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் சிறையில் இருந்தார். சிறையில் இருந்தபடியே அவர் அரசாங்கத்தை இயக்கினார். ஜாமீனில் விடுதலையான பின்னர் தான் அவர் ராஜினாமா செய்தார். ஒருவேளை இன்றைக்கு தாக்கல் செய்யப்பட்ட மசோதா, அப்போது சட்டமாக அமலில் இருந்திருந்தால், கேஜ்ரிவால் தனது பதவியை சிறை சென்ற 31-வது நாளில் இழந்திருப்பார்.
இந்நிலையில், ‘எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் முதல்வர்கள், அமைச்சர்களை ஒடுக்கவே இந்தப் புதிய சட்ட மசோதாவை பாஜக அரசு கொண்டு வருகிறது” என்று எதிர்க்கட்சிகள் கண்டனமும், கடும் எதிர்ப்பும் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்வி த்னது எக்ஸ் பக்கத்தில், “எதிர்க்கட்சிகளை நிலைகுலையச் செய்ய சிறந்த வழி, ஒருதலைபட்சமாகவே செயல்படும் மத்திய புலனாய்வு அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சி முதல்வர்களை கைது செய்வதாகும். தேர்தலில் அவர்களை தோற்கடிக்க முடியாமல் போனாலும் கூட இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் அவர்களை அப்புறப்படுத்திவிடலாம் என்பது பாஜகவின் திட்டம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று மசோதாக்களின் விவரம்: அரசியலமைப்பு (130-வது திருத்த) மசோதா 2025, யூனியன் பிரதேச அரசு (திருத்த) மசோதா 2025, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019 திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019-ன் பிரிவு 54-ல் திருத்தம் மேற்கொள்வதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் அல்லது அமைச்சர் தொடர்ந்து 30 நாட்கள் சிறைக் காவலில் வைக்கப்பட்டால் அவரை பதவி நீக்கம் செய்ய இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த மசோதா கொடூரமானது என்று எதிர்க்கட்சிகள் கண்டிக்கின்றன.
’புலனாய்வு அமைப்புகளின் கைகள் ஓங்கும்’ - கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அமலாக்கத் துறை பல்வேறு மாநில அமைச்சர்கள், ஒரு சில முதல்வர்கள் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த தடுப்புச் சட்டத்தின் கீழான அமலாக்கத் துறையின் இந்த கைது நடவடிக்கையின்போது, 30 நாட்கள் வரை ஜாமீன் வழங்காமல் இருக்க முடியும்.
இந்தப் பின்னணியில், ஒரு மாநில முதல்வரோ, அமைச்சாரோ தற்போது தாக்கல் செய்யப்பட்ட மசோதா சட்டவடிவம் பெற்ற பின்னர் கைதானால் பதவியை இழக்கச் செய்யும். இதனால் புலனாய்வு அமைப்புகளின் கைகள் ஓங்கும், அவை மத்திய அரசால் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
ஆனால், இதில் ஓர் ஆறுதலாக பிரதமரோ, முதல்வர்களோ அல்லது அமைச்சர்களோ சிறைக் காவலிலிருந்து விடுதலையானால், அவர்களுக்கு முறையே குடியரசுத் தலைவரோ அல்லது ஆளுநரோ மீண்டும் பதவிப் பிரமாணம் செய்துவைக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த மசோதாவுக்கு என்ன அவசியம் வந்தது? - இப்போதைய சட்டங்களின்படி அமைச்சர்கள் கைது செய்யபட்டால் அவர்கள் அந்தப் பதவியில் நீடிப்பதை தடை செய்வதற்கு எந்த வழிவகையும் இல்லை. மக்கள் பிரதிநிதிகள் (எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள்) கைது செய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு 2 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலான தண்டனை வழங்கப்பட்டால் மட்டுமே அவர்களின் பதவி பறிபோகும் என மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் சொல்கிறது.
கடந்த ஆண்டு கைதான டெல்லியின் முதல்வராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவால், தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி ஆகியோர் கைதுக்குப் பின்னரும் பதவியில் நீடித்தது சர்ச்சையானது நினைவிருக்கலாம். செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அவரை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருந்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின். அது ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அரசு மோதிக் கொள்ளும் சூழலை ஏற்படுத்தியது. அதனால், இந்தச் சட்டம் அவசியமாகிறது என்கிறது மத்திய அரசு தரப்பு.
கட்டற்ற அதிகாரம் சேரும் - இந்த சட்ட மசோதா தாக்கலானால், மத்திய அரசு தனது கட்சி, கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்களைக் குறிவைத்து மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் நெருக்கடிகளைக் கொடுக்கும். இது மத்திய அரசுக்கு கட்டற்ற அதிகாரத்தை தரும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
அண்மையில், அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் தொடர்பான வழக்கு ஒன்றில், “அமலாக்கத் துறை எல்லை கடந்து செயல்படுகிறது” என உச்ச நீதிமன்றம் கண்டித்திருந்தது நினைவுகூரத்தக்கது. அமலாக்கத் துறை வழக்குகளில் வெறும் 10% பேர் மட்டுமே தண்டனை பெறுவதாகவும் கூறப்பட்டிருந்தது. அரசியல் மோதல்களுக்காக அமலாக்கத் துறை பயன்படுத்தப்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் தான், அரசியலமைப்பின் 130-ஆவது திருத்தத்தை கோரும் சட்ட மசோதா இந்திய ஜனநாய கட்டமைப்பின் மீது தொடுக்கப்படும் மற்றும் ஒரு கொடிய தாக்குதல் என்று எதிர்க்கட்சிகள் முழங்குகின்றன.
‘சசி தரூரின் ஸ்டன்ட்’ - ஆனால், இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் மேலும் கூறும்போது, "நீங்கள் 30 நாள்கள் சிறையில் வைக்கப்பட்டால், அமைச்சராக தொடர முடியுமா? இது பொது அறிவு சார்ந்த ஒன்று. இதில் தவறு இருப்பதாக எதுவும் எனக்குத் தெரியவில்லை.
இந்த மசோதாவை நாடாளுமன்றக் குழு ஆய்வுக்கு அனுப்புவது நல்ல விஷயம்தான். குழுவுக்குள் விவாதம் நடத்துவதுதான் ஜனநாயகத்துக்கு நல்லது என்று நினைக்கிறேன். ஆகையால், விவாதத்தை நடத்துவோம்" என்றார்.
முதல்வர் ஸ்டாலின் சாடல்: இந்த மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “இது கருப்பு நாள். இந்த மசோதா கருப்பு மசோதா. வளர்ந்து வரும் சர்வாதிகாரிகள் இப்படித்தான் போக்கை தொடங்குவர். இந்தியாவையும் சர்வாதிகாரத்தில் மூழ்கடிக்க முயற்சிக்கின்றனர். வாக்கு திருட்டு விவகாரத்தை திசை திருப்புவதற்காகவே இப்படியான ஒரு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது.
அரசியல் எதிரிகள் மீது பொய் வழக்குகளை போட்டு சிறையில் அடைத்து பதவிகளை பறிப்பது என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிகளை எந்தவித நீதிமன்ற விசாரணையும் இல்லாமல் பறிப்பது என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரான” என்று சாடியுள்ளார். இன்னும் எதிர்க்கட்சிகள் பலவும் தங்களின் கண்டனக் குரல்களைப் பதிவு செய்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT