Published : 20 Aug 2025 03:59 PM
Last Updated : 20 Aug 2025 03:59 PM
ராஞ்சி: ஜார்க்கண்டின் கிழக்கு சிங்பூமில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பயன்பாட்டில் இல்லாத 50,000-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களின் பெயர்களை அதிகாரிகள் அதிரடியாக நீக்கியுள்ளனர்.
இதுகுறித்து வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, கிழக்கு சிங்பூமில் மொத்தமுள்ள 1,64,237 செயல்படாத ரேஷன் கார்டுகளில், 50,323 பேரின் பெயர்கள் சரிபார்ப்பு இயக்கத்தின்போது நீக்கப்பட்டுள்ளன. 576 அட்டைதாரர்கள் சலுகைகளைப் பெற தகுதியுடையவர்கள் எனக் கண்டறியப்பட்டாலும், 1,13,338 பேரின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
துணை ஆணையர் கர்ண் சத்யார்த்தியின் உத்தரவின் பேரில், சரிபார்ப்பைத் தொடர்ந்து பட்டியலில் இருந்து தகுதியற்ற ரேஷன் கார்டுதாரர்களின் பெயர்களை நீக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கிழக்கு சிங்பூம் மாவட்டத்தின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் இருந்து 20,067 பெயர்கள் ஆதார் அட்டை எண்கள் சந்தேகத்திற்குரியதாக இருந்ததால் நீக்கப்பட்டது. இதுபோன்ற 2,500-க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
18 வயதுக்குட்பட்ட அல்லது 100 வயதுக்கு மேற்பட்ட 2,274 ஒற்றை உறுப்பினர் அட்டைதாரர்களின் பெயர்களை அதிகாரிகள் நீக்கியுள்ளதாகவும், இது தொடர்பான 13,332 பேரின் பெயர்கள் சரிபார்ப்பு நடைபெற்று வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
தரவுகளின்படி, அதிகபட்சமாக ஜாம்ஷெட்பூர் நகர்ப்புறத்தில் மொத்தம் 68,565 குடும்ப அட்டைதாரர்கள் பெயர்கள் செயல்பாட்டில் இல்லாததும், ஜாம்ஷெட்பூர்-கம்-கோல்முரி பகுதியில் 46,703 குடும்ப அட்டைதாரர் பெயர்கள் செயல்பாட்டில் இல்லாததும் கண்டறியப்பட்டது. உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கத்தில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டதாக துணை ஆணையர் கர்ண் சத்யார்த்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT