Published : 20 Aug 2025 03:27 PM
Last Updated : 20 Aug 2025 03:27 PM
புதுடெல்லி: பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
அரசியலமைப்பு (130வது திருத்த) மசோதா 2025, யூனியன் பிரதேச அரசு(திருத்த) மசோதா 2025, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019 திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019ன் பிரிவு 54ல் திருத்தம் மேற்கொள்வதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் அல்லது அமைச்சர் தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால் அவரை பதவி நீக்கம் செய்ய இந்த மசோதா வழிவகை செய்கிறது. கடுமையான குற்றச் செயல்களுக்காகக் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் முதல்வர் அல்லது அமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கு ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 ல் எந்த ஏற்பாடும் இல்லை என்பதால், இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இந்த மசோதாவின்படி, ஒரு அமைச்சர் ஊழல் அல்லது கடுமையாக குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றங்களில் அவர் ஈடுபட்டிருந்தால் 31வது நாள் முதல்வரின் பரிந்துரையின்பேரில் அவரை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் நீக்க வேண்டும். ஒருவேளை ஆளுநர் பரிந்துரை அளிக்கவில்லை என்றால், தானாகவே 31-ம் நாளில் அவர் பதவியை இழப்பார்.
இதேபோல், ஒரு முதல்வர் தொடர்ந்து 30 நாட்களுக்கு காவலில் இருந்தால், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதன் தண்டனைக் காலம் குறைந்தது 5 ஆண்டுகள் என இருந்தால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால், 31வது நாளில் இருந்து அவர் முதல்வர் பதவியை இழப்பார்.
இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய ஏஐஎம்ஐஎம் உறுப்பினர் அசாதுதின் ஒவைசி, “இந்த மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படுவதை நான் எதிர்க்கிறேன். இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு உள்ள அதிகாரத்தை குறைமதிப்புக்கு உள்ளாக்குகிறது.
அற்பமான குற்றச்சாட்டுக்கள் மற்றும் சந்தேகங்களின் அடிப்படையில் நிர்வாக அமைப்புகள் நீதிபதியாகவும் தண்டிப்பவராகவும் மாற இது வழி வகுக்கிறது. காவல் அரசை உருவாக்குவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் மீது அடிக்கப்படும் மரண ஆணி. இந்த நாட்டை ஒரு காவல் அரசாக மாற்ற இந்திய அரசியலமைப்பு திருத்தப்படுகிறது.” என குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT