Published : 20 Aug 2025 01:47 PM
Last Updated : 20 Aug 2025 01:47 PM
புதுடெல்லி: ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 20-ம் நாளான இன்று வழக்கம்போல் நாடாளுமன்ற இரு அவைகளும் காலை 11 மணிக்கு கூடின. மக்களவை கூடியதும் சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை தொடங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், வழக்கம்போல் பிஹார் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பின. அவர்களை சமாதானப்படுத்தும் சபாநாயகரின் முயற்சி வெற்றி பெறவில்லை. இதையடுத்து, அவையை நண்பகல் 12 மணிக்கு ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
இதேபோல், மாநிலங்களவையிலும் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்தார். மாநிலங்களவை மீண்டும் 12 மணிக்கு கூடியபோது, எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை 12 மணிக்குக் கூடியதும் எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில், ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025 ஐ, அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்தார். இதையடுத்து அவை 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அமைச்சரவை ஒப்புதல்: ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா ஆன்லைன் விளையாட்டு தளங்களை சட்ட வரம்புக்குள் கொண்டு வந்து, டிஜிட்டல் செயலிகள் மூலம் நடைபெறும் சூதாட்டங்களுக்கு அபராதம் விதிக்க வழி செய்யும். இவற்றை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செயல்படும். ஆன்லைன் சூதாட்டத்துக்கு இந்த மசோதா முடிவு கட்டும் எனத் தெரிகிறது. அங்கீகாரமற்ற சூதாட்டங்களுக்கு ஏற்கெனவே அபராதம் மற்றும் 7 ஆண்டு சிறை தண்டனை உள்ளது. புதிய மசோதாப்படி ஆன்லைன் சூதாட்டத்துக்கும் அபராதம் மற்றும் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT