Published : 20 Aug 2025 08:38 AM
Last Updated : 20 Aug 2025 08:38 AM
ஜெய்ப்பூர்: ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டத்தை மணிகா விஸ்வகர்மா வென்றுள்ளார். வரும் நவம்பரில் தாய்லாந்தில் நடைபெற உள்ள மிஸ் யுனிவர்ஸ் சர்வதேச அழகி போட்டியில் இந்தியாவில் சார்பில் அவர் பங்கேற்க உள்ளார். கடந்த 1926-ம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகி போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இரண்டாம் உலகப்போரின்போது இந்த போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் கடந்த 1952 முதல் மீண்டும் ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டி நடைபெற்று வருகிறது. இந்த சர்வதேச அழகி போட்டியில் பங்கேற்க அந்தந்த நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் அழகி போட்டி நடத்தப்படுகிறது.
இதன்படி ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டத்துக்கான போட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்று வந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 48 பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் சார்பில் காமாக் ஷி ஆத்ரேயா பங்கேற்றார். பல்வேறு சுற்றுகளுக்குப் பிறகு இறுதிச் சுற்றுக்கு 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் இரவு இறுதிச் சுற்று போட்டி நடைபெற்றது. இதில் ராஜஸ்தானை சேர்ந்த மணிகா விஸ்வகர்மா, ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டத்தை வென்றார்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த தான்யா சர்மா, ஹரியானாவை சேர்ந்த மெஹக் திங்ரா ஆகியோர் 2, 3-வது இடங்களைப் பிடித்தனர். வரும் நவம்பரில் தாய்லாந்தின் நந்தபுரியில் ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் மணிகா விஸ்வகர்மா பங்கேற்க உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT