Published : 20 Aug 2025 08:24 AM
Last Updated : 20 Aug 2025 08:24 AM
மும்பை: மும்பையில் தொடரும் கனமழை காரணமாக அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு தனியார் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் கடந்த 4 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
நேற்று பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் புரண்டோடியது. மேலும் முக்கிய சாலை சந்திப்புகளில் வெள்ளம் சூழ்ந்து நிற்பதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.
மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. கனமழை காரணமாக மும்பையில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை, வெள்ளம் காரணமாக மும்பையில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் வெளியூர் செல்ல நினைப்பவர்களும் தங்களது பயணத்தை தள்ளிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பான உத்தரவு மும்பை பெரு மாநகராட்சி(பிஎம்சி) பிறப்பித்துள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மும்பை நகரம், கிழக்கு, மேற்கு புறநகர் பகுதிகளில் முறையே 186.43, 208.78, 238.19 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மும்பையின் தாதர், மாதுங்கா, பாரெல், சியோன் பகுதிகளில் உள்ள ரயில்வே தண்டவாளங்களில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில் நிலையங்களில் இருந்து ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT