Last Updated : 19 Aug, 2025 06:48 PM

 

Published : 19 Aug 2025 06:48 PM
Last Updated : 19 Aug 2025 06:48 PM

“சீனாவும் இந்தியாவும் போட்டியாளர்கள் அல்ல... கூட்டாளிகள்!” - சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி

புதுடெல்லி: சீனாவும் இந்தியாவும் போட்டியாளர்களாக அல்லாமல், கூட்டாளிகளாகப் பார்க்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள வாங் யி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியவை தற்போது வெளியாகி உள்ளது. அமைச்சர் வாங் யி தனது உரையில், "இந்திய - சீன உறவுகள் ஒத்துழைப்புக்குத் திரும்புவதற்கான நேர்மறை போக்கைக் காட்டுகின்றன. இரு நாடுகளும் ஒன்றையொன்று போட்டியாளர்களாக அல்லாமல், கூட்டாளிகளாகப் பார்க்க வேண்டும். இந்தியா - சீனா இடையே தூதரக உறவு ஏற்பட்டு தற்போது 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. நாம் கடந்த காலங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இரு நாடுகளும் சரியான உத்தி ரீதியிலான கருத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும். ஒரு நாடு மற்றொரு நாட்டை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதில் தங்கள் மதிப்புமிக்க வளங்களை இரு நாடுகளும் முதலீடு செய்ய வேண்டும். முக்கிய அண்டை நாடுகளான நாம், பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையுடன் இணைந்து வாழ்வதற்கும், இணைந்து வளர்வதற்கும் ஏற்ப இரு தரப்புக்கும் வெற்றி தரக்கூடிய சரியான வழிகளை ஆராய வேண்டும்.

அண்டை நாடுகளுடன் குறிப்பாக இந்தியாவுடன், நட்பு, நேர்மை, பரஸ்பர நன்மை, உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய கொள்கைகளை நிலைநிறுத்த சீனா தயாராக உள்ளது. மேலும், இந்தியாவுடன் இணைந்து அமைதியான, பாதுகாப்பான, வளமான, அழகான, நட்பு ரீதியிலான வீட்டைக் கட்டமைக்கவும் தயாராக இருக்கிறது. இரு நாடுகளும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், ஒரே திசையில் செல்ல வேண்டும், தடைகளை நீக்க வேண்டும், ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும், இருதரப்பு உறவுகளின் வேகத்தை ஒருங்கிணைக்க வேண்டும். இதன்மூலம், கிழக்கின் இரண்டு பெரிய நாகரீகங்களின் மறுமலர்ச்சி, பரஸ்பரம் நன்மை பயக்கும். ஆசியாவுக்கும் உலகுக்கும் உறுதியையும் நிலைத்தன்மையையும் வழங்கும்.

280 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இரண்டு பெரிய வளரும் நாடுகளான இந்தியாவும் சீனாவும் உலகளாவிய பொறுப்புணர்வை வெளிப்படுத்த வேண்டும், முக்கிய சக்திகளாக செயல்பட வேண்டும், ஒற்றுமை மூலம் வளரும் நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும், சர்வதேச உறவுகளில் உலக பன்முகமயமாக்கல் மற்றும் ஜனநாயகமாக்கலை ஊக்குவிக்க பங்களிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x