Published : 19 Aug 2025 06:37 AM
Last Updated : 19 Aug 2025 06:37 AM

உக்ரைன் போர் தொடர்பாக பிரதமர் மோடி, அதிபர் புதின் முக்கிய ஆலோசனை

புதுடெல்லி: உக்​ரைன் போர் தொடர்​பாக பிரதமர் நரேந்​திர மோடி​யும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் தொலைபேசி​யில் நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர்.

கடந்த 2022-ம் ஆண்டு முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இரு நாடு​கள் இடையே போர் நிறுத்​தத்தை ஏற்​படுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமரச முயற்​சி​யில் ஈடு​பட்​டிருக்​கிறார்.

இதுதொடர்​பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்க அதிபர் ட்ரம்​பும் கடந்த 15-ம் தேதி அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம் ஆங்​கரேஜ் நகரில் சந்​தித்​துப் பேசினர். மூன்று மணி நேரம் நீடித்த இந்த சந்​திப்​பின்​போது எந்த ஒப்​பந்​த​மும் கையெழுத்​தாக​வில்​லை. எனினும் பல்​வேறு விவ​காரங்​களில் உடன்​பாடு எட்​டப்​பட்டு இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்​புடன் நடத்​திய பேச்​சு​வார்த்தை குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நெருங்​கிய நட்பு நாடு​களிடம் விவரித்து வரு​கிறார். இதன் ஒரு பகு​தி​யாக அதிபர் புதின் நேற்று பிரதமர் மோடியை தொலைபேசி​யில்பேசி​னார். அப்​போது உக்​ரைன் போர் குறித்து இரு தலை​வர்​களும் விரி​வாக விவா​தித்​தனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பேசிய விவ​காரங்​கள் குறித்து பிரதமர் மோடி​யுடன் அதிபர் புதின் எடுத்​துரைத்​தார். இதுகுறித்து பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “அதிபர் ட்ரம்​புடன் நடத்​திய பேச்​சு​வார்த்தை விவரங்​களை ரஷ்ய அதிபர் புதின் என்​னோடு பகிர்ந்து கொண்​டார். இதற்​காக அவருக்கு நன்றி தெரி​வித்து கொள்​கிறேன். உக்​ரைன் விவ​காரத்​தில் சுமுக தீர்வு எட்​டப்பட வேண்​டும் என்று இந்​தியா வலி​யுறுத்தி வரு​கிறது” என்று தெரி​வித்​துள்​ளார்.

கச்சா எண்​ணெய் விவ​காரம்: ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெயை இந்​தியா இறக்​குமதி செய்து வரு​கிறது. இதன்​காரண​மாக இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்​துள்​ளார். மேலும் ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கும் இந்​திய நிறு​வனங்​கள் மீது அமெரிக்கா​வும் ஐரோப்​பிய நாடு​களும் பொருளா​தார தடைகளை விதித்து உள்​ளன. இந்த விவ​காரம் தொடர்​பாக​வும் பிரதமர் மோடி​யும் அதிபர் புதினும் பேச்​சு​வார்த்தை நடத்​தி​ய​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

அமெரிக்​கா​வின் அழுத்​தத்தை மீறி ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா தொடர்ந்து கச்சா எண்​ணெயை வாங்கி வரு​கிறது. இப்​போதைய சர்​வ​தேச சூழலில் பிரிக்​ஸ் கூட்​டமைப்​பில் இடம்​பெற்​றுள்​ள இந்​தி​யா, ரஷ்​யா, சீ​னா, பிரேசில்​, தென்​ஆப்​பிரிக்​கா நாடு​கள்​ இடையே நெருக்​கம்​ அதி​கரித்​து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x