Published : 19 Aug 2025 01:21 AM
Last Updated : 19 Aug 2025 01:21 AM
புதுடெல்லி: ராணுவ பயிற்சிப் பள்ளிகளில் காயமடைந்து மாற்றுத் திறனாளியாகும் துணிச்சல்மிகு வீரர்களை ஓரம்கட்டி வீட்டுக்கு அனுப்பாமல், முப்படை அலுவலகங்களில் உட்கார்ந்து பணிபுரிய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தேசிய பாதுகாப்பு அகாடமி, இந்திய ராணுவ அகாடமி போன்றவற்றில் பயிற்சியின்போது எதிர்பாராவிதமாக காயமடைந்து கை, கால்களை இழந்தவர்கள் ராணுவப் பணிக்கு சேர்க்கப்படுவது இல்லை. அந்த வகையில், கடந்த 1985 முதல் இதுவரை சுமார் 500 பேரும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 20 பேரும் மாற்றுத் திறனாளியாகி வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.40 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்கப்படுவதுபோல மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வதியம், மருத்துவ சிகிச்சை ஆகியவை மறுக்கப்படுகிறது. இதனால், அவர்கள் இன்னலுக்கு ஆளாவதாக செய்தி வெளியானது.
இதன் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரணை மேற்கொண்டது. நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று ராணுவ பயிற்சி அகாடமிகளுக்கு சென்று காயமடைகிற அல்லது மாற்றுத் திறனாளியாகிற துணிச்சல்மிகு வீரர்களை ஓரம்கட்டி வீட்டுக்கு அனுப்பக் கூடாது. முப்படைகளிலும் பணியாற்ற அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அவர்களுக்கு உட்கார்ந்து பணிபுரியும் வேலைகளை வழங்குவது குறித்து ஆராய வேண்டும்.
அவர்களது மருத்துவ செலவுக்காக மாதம்தோறும் வழங்கப்படும் ரூ.40 ஆயிரம் கருணைத் தொகையை உயர்த்துவது குறித்தும், பயிற்சியின்போது காயமடைந்து மாற்றுத் திறனாளியாக மாறும், உயிரிழக்கும் வீரர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும். இந்த வழக்கில் மத்திய அரசும், பாதுகாப்பு படைகளும் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT