Published : 19 Aug 2025 01:17 AM
Last Updated : 19 Aug 2025 01:17 AM
பாட்னா: பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர், விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி மேற்கொள்ளப்பட்டுகடந்த 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 7.24 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அவர்களில் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தவர்கள், 36 லட்சம் பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்துவிட்டனர். இதனால் அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இதற்கிடையே, பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சில நாட்களுக்கு முன்புஇந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் அமர்வு, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்விவரங்களை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர், விவரங்களை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் இணையத்தில் வெளியிட்டது.இதுகுறித்து பிஹார் தலைமை தேர்தல் அதிகாரி வினோத் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட 56 மணிநேரத்தில், 65 லட்சம் பேரின் விவரங்களை தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம். தொகுதி வாரியாக, வாக்குச்சாவடி வாரியாக பெயர், விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எதற்காக பெயர் நீக்கப்பட்டது என்பதற்கான காரணமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஷ்டிரிய ஜனதா தள தலைவர்கள் கூறும்போது, “பிஹார் முழுவதும் வாக்காளர்களிடம் இண்டியா கூட்டணி தலைவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக 65 லட்சம் பேரின் பெயர், விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன” என்றனர்.
தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியபோது, ‘‘வாக்காளர் வரைவு பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக ஆகஸ்ட் 1 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 1 வரை திருத்தம் கோரி விண்ணப்பங்களை அளிக்கலாம். இதன் மீதான பரிசீலனை செப்டம்பர் 25-ம் தேதிக்குள் நிறைவடையும். செப்டம்பர் 30-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. செப்டம்பர் 25-ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT