Published : 18 Aug 2025 03:36 PM
Last Updated : 18 Aug 2025 03:36 PM
சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பினை தொடர்ந்து, அது தொடர்பாக 7 கேள்விகளை முதல்வர் ஸ்டாலின் எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இண்டியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு. பின்வரும் கேள்விகள் எழுகின்றன:
1. வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?
2. புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா? தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா?
3. Registration of Electors Rules, 1960-இன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் இரண்டு முறையீடு நடைமுறைக்கான காலவரையறை, எதிர்வரும் பிஹார் மாநிலத் தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களை விலக்கும் வாய்ப்புள்ளது. இவ்விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தீர்க்கப் போகிறது?
4. பிற மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும்போது, இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் கணக்கில்கொள்ளுமா?
5. 01/05/2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மறைந்த வாக்காளர்களின் பெயரை நீக்குமாறு 17/07/2025 அன்று தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் முறையிட்டோம். இது எப்போது நிறைவேற்றப்படும்?
6. வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்கத் தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது எது?
7. “நியாயமான தேர்தல்கள்” என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருக்குமானால், அது மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் - வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கலாமே?’ எனத் தெரிவித்துள்ளார்.
பிஹாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தேர்தல் ஆணையம், ஆளும் பாஜக.,வுடன் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டு சதி செய்வதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேர்தல் ஆணையத்துக்கு எதிரிகளும் இல்லை, ஆதரவாளர்களும் இல்லை. எங்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் சரி சமம்தான். பிஹாரில் வெளிப்படையான முறையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
எனவே, வாக்கு திருட்டு போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி மக்களை தவறாக வழிநடத்துவது அரசியல் சாசன சட்டத்தை அவமதிக்கும் செயல். வாக்கு திருட்டு, இரட்டை ஓட்டு போன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் ஆதாரமற்றவை” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT