Published : 17 Aug 2025 11:03 PM
Last Updated : 17 Aug 2025 11:03 PM
புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சி.பி. ராதாகிருஷ்ணன், தனது அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறனால் பொது வாழ்வில் நீண்ட காலம் தன்னை வேறுபடுத்திக் காட்டியுள்ளார். தாம் வகித்த பல்வேறு பதவிகளின் போது, சமூக சேவை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் அடிமட்ட நிலையில் அவர் விரிவான பணிகளை மேற்கொண்டுள்ளார். எங்கள் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அவரை பரிந்துரைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி குடும்பம் முடிவு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை இறுதி செய்வதற்காக கூட்டப்பட்ட பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த சி.பி.ராதாகிருஷ்ணன், 1998, 1999 ஆகிய மக்களவை தேர்தல்களில் கோவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2023ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, தெலங்கானா ஆளுநராகவும் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு, அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் 2024ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார் சி.பி.ராதாகிருஷ்ணன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT