Published : 17 Aug 2025 07:08 PM
Last Updated : 17 Aug 2025 07:08 PM
பெங்களூரு: ‘துணை முதல்வர் டி.கே. சிவகுமார்தான் அடுத்த கர்நாடக முதல்வராக வருவார்’ என்று கூறியதற்காக சன்னகிரி எம்எல்ஏ பசவராஜு வி. சிவகங்காவுக்கு மாநில காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது.
கடந்த சில மாதங்களாக கர்நாடகாவில் முதல்வர் பதவி தொடர்பான சர்ச்சை புகைந்த நிலையில், முதல்வர் சித்தராமையா தனது ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வார் காங்கிரஸ் தலைமை உறுதியாக தெரிவித்தது.
இந்த நிலையில், சன்னகிரி காங்கிரஸ் எம்எல்ஏ பசவராஜு வி. சிவகங்கா சனிக்கிழமையன்று தாவங்கேரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், "டிசம்பர் மாதத்திற்குப் பிறகு, டி.கே. சிவக்குமார் முதல்வராக வருவார்" என்று கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பினார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நிவேதித் ஆல்வா வெளியிட்ட அறிவிப்பில், ‘முதல்வர் மாற்றம் குறித்து சிவகங்கா ஊடகங்களுக்கு ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார். இது கட்சிக்குள் குழப்பத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இக்கருத்து கட்சியின் ஒழுக்கத்தை மீறுவதாகவும் கருதப்படுகின்றன.
இந்த ஒழுக்கக்கேடான கருத்துக்களை தீவிரமாகக் கவனத்தில் கொண்டு, மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் கிடைத்த ஏழு நாட்களுக்குள் இக்கருத்து குறித்து விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சனிக்கிழமையன்று இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவரான சிவகுமார், "முதல்வர் பதவி மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து யாரும் பேசக்கூடாது. எம்எல்ஏக்கள் கட்சி ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும், அவர்கள் எல்லை மீறக்கூடாது. தேவையற்ற கருத்துகளை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கடந்த காலங்களில் அவர்களுக்கு கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்ற போதிலும், சிவகங்கா மீண்டும் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிப்பது கட்சி ஒழுக்கத்தை மீறுவதாகும். எனவே அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT