Last Updated : 15 Aug, 2025 02:25 PM

9  

Published : 15 Aug 2025 02:25 PM
Last Updated : 15 Aug 2025 02:25 PM

ஜிஎஸ்டி வரிவிதிப்பில் வருகிறது அதிரடி மாற்றம் - பிரதமர் மோடி அறிவித்த தீபாவளி பரிசு!

புதுடெல்லி: தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதன்மூலமாக தற்போதைய ஐந்து விகித முறையிலிருந்து, இரண்டு விகித ஜிஎஸ்டி முறை அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் 79வது சுதந்திர தினமான இன்று புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, “அரசாங்கம் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்களைக் கொண்டுவரவுள்ளது. இது சாதாரண மக்கள் மீதான வரிச்சுமையைக் குறைக்கும். இது உங்களுக்கான தீபாவளி பரிசாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

ஜிஎஸ்டி குறித்த பிரதமரின் அறிவிப்பு பற்றி நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின்படி, ‘ஜிஎஸ்டி விகிதத்தின் மாற்றம் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்த தனது முன்மொழிவை, மத்திய அரசு ஜிஎஸ்டி கவுன்சிலால் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவுக்கு அனுப்பியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைகள் குறித்து ஆலோசித்து, இந்த நிதியாண்டுக்குள் பெரும்பாலான சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பில் அறிமுகமாகவுள்ள சீர்திருத்தங்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், குறிப்பாக சாமானிய மக்கள், பெண்கள், மாணவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும்.

இந்த சீர்திருத்தம், பொருட்களின் வகைப்பாடு தொடர்பான சர்ச்சைகளைக் குறைத்தல், குறிப்பிட்ட துறைகளில் வரி கட்டமைப்புகளை சரிசெய்தல், வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருக்கும். தரநிலை மற்றும் தகுதியின் அடிப்படையில் 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட எளிய வரி விகிதங்களை நோக்கி நகர்வது இந்த சீர்திருத்ததின் முக்கிய நோக்கமாக இருக்கும். இதன்படி சிறப்பு விகிதங்கள் சில குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இச்சீர்திருத்த்தை தொடர்ந்து சாமானிய மக்களுக்கான பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி குறைக்கப்படும். பொருட்களின் விலை குறைவதால், நுகர்வு அதிகரிக்கும். எளிதான அணுகல் எனும் நோக்கத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உள்ள பொருந்தாத தன்மைகளை நீக்கவும், பணத்தைத் திரும்பப்பெறுவதை விரைவாக்கவும், தானியங்கி முறையில் செயலாக்குவதற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.

அதேபோல இந்த விஷயத்தில் கூட்டுறவு கூட்டாட்சியின் உண்மையான உணர்வில், மத்திய அரசு மாநிலங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றவும் உறுதிபூண்டுள்ளது. பிரதமர் மோடியின் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களைச் செயல்படுத்த, வரும் வாரங்களில் மாநிலங்களுடன் பரந்த அளவிலான ஒருமித்த கருத்து உருவாக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x