Published : 15 Aug 2025 07:10 AM 
 Last Updated : 15 Aug 2025 07:10 AM
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (பிஎச்யூ) தெலுங்கு மொழித் துறையில் 4 பேராசிரியர்கள் பணியாற்றினர். அவர்களில் 2 பேர் ஓய்வு பெற்றதால் மற்ற 2 பேராசிரியர்களில் ஒருவர், 3 ஆண்டுக்கு துறைத் தலைவராகத் தொடர்ந்துள்ளார். தற்போதைய தலைவர் பேராசிரியர் சி.எஸ்.ராமச்சந்திர மூர்த்தி விடுப்பு எடுத்ததால் சக பேராசிரியர் பி.வெங்கடேஸ்வரலுதுறைத் தலைவராக இருப்பார்.
இந்நிலையில், கடந்த ஜுலை 28-ம் தேதி பிஎச்யூ வளாகத்தில் பணி முடித்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் ராமச்சந்திர மூர்த்தி. அப்போது அவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கைகள் மற்றும் ஒரு காலில் முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். புகாரின் அடிப்படையில் வாராணசி மாநகர காவல் துறை துணை ஆணையர் டி.சரவணன் தலைமையில் விசாரணை நடந்தது.
இதில், சக பேராசிரியர் வெங்கடேஸ்வரலு கூறியபடி அவரது 2 முன்னாள் மாணவர்கள் தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது. அதற்காக, உள்ளூர் ரவுடிகள் 4 பேருக்கு அந்த மாணவர்கள் பணம் கொடுத்ததும் அம்பலமானது. இதையடுத்து முன்னாள் மாணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான பேராசிரியர் வெங்கடேஸ்வரலு, முன்னாள் மாணவர் காசீம் பாபு உட்பட 4 பேர் தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் தமிழரான துணை ஆணையர் சரவணன் கூறும்போது, “இந்த தாக்குதல் கொலை செய்யும் நோக்கில் நடத்தப்படவில்லை. மாறாக காயப்படுத்தி மருத்துவ விடுப்பு எடுக்க வைப்பதற்காக நடத்தப்பட்டுள்ளது. ராமச்சந்திரமூர்த்தி விடுப்பு எடுத்தால் வெங்கடேஸ்வரலு தொடர்ந்து தலைவராக நீடிக்கலாம். இதற்காக தனது முன்னாள் மாணவர்களை ஆந்திராவில் இருந்து விமானத்தில் வருவதற்கும் ரவுடிகளுக்கு கொடுக்கவும் ரூ.49 ஆயித்தை வழங்கி உள்ளார். விரைவில் இதர 4 குற்றவாளிகளையும் கைது செய்வோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
 
								
WRITE A COMMENT