Published : 15 Aug 2025 07:06 AM 
 Last Updated : 15 Aug 2025 07:06 AM
புதுடெல்லி: பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, கடந்த 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் உயிரிழந்த மற்றும் நிரந்தரமாக புலம்பெயர்ந்த 65 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஏடிஆர் தொண்டு நிறுவனம் உட்பட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மாலா பாக்சி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: பிஹார் வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதில் 22 லட்சம் பேர் இறந்துவிட்டதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. அப்படியானால் இந்த தகவல் பூத் மட்டத்தில் தெரிவிக்காதது ஏன்? எனவே, நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர் மற்றும் அவர்களை நீக்கியதற்கான காரணத்தை வரும் 19-ம் தேதிக்குள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும். அப்போதுதான் நீக்கப்பட்ட ஒவ்வொரு வாக்காளரும் காரணத்தை தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் பட்டியலில் இருந்து தங்கள் பெயர் தவறாக நீக்கப்பட்டதாக கருதும் வாக்காளர்கள், ஆதார் அட்டை நகலுடன் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம். இது தொடர்பான தகவலை அதிகம் விற்பனையாகும் பிராந்திய மொழி நாளிதழில் தெரிவிக்க வேண்டும். தூர்தர்ஷன் உள்ளிட்ட முன்னணி செய்தித் தொலக்காட்சிகளிலும் செய்தி வெளியிட வேண்டும். மாவட்ட தேர்தல் அதிகாரியின் சமூக ஊடக பக்கத்திலும் இது பற்றிய அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இதுதவிர, பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர் (அதற்கான காரணங்களுடன்) பட்டியலை சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக தகவல் பலகையிலும் வெளியிட வேண்டும்.
மேலும் வாக்காளர்கள் தங்கள் இபிஐசி எண்ணை தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ளீடு செய்து நிலவரத்தை தெரிந்து கொள்வதற்கான வசதியையும் செய்ய வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 22-ம் தேதி நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்றுக் கொள்வதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது ஆதார் அட்டையை ஆவணமாக கருத முடியாது என தேர்தல் ஆணையம் கூறியிருந்த நிலையில், அதை ஆவணமாக சமர்ப்பிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
 
								
WRITE A COMMENT